தனது வீட்டுப் பணிப்பெண்ணைச் சித்திரவதை செய்ததாகக் கடும் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார் நடிகை டிம்பிள் ஹயாதி.
தமிழில் ‘வீரமே வாகை சூடும்’ படத்திலும் சில இந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள டிம்பிள், தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார்.
இந்நிலையில், இவரது வீட்டில் வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பணிப்பெண்ணான பிரியங்கா, காவல்துறையில் அளித்த புகாரில் தாம் பணியில் சேர்ந்த நாள் முதல் டிம்பிள் பல வகையிலும் சித்திரவதை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் 22ஆம் தேதிதான் தாம் பணியில் சேர்ந்ததாகவும் அப்போது முதல் டிம்பிள் தம்மை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி வந்ததாகவும் பிரியங்கா கூறியுள்ளார்.
“கடந்த மாதம் 29ஆம் தேதி டிம்பிளும் அவரது கணவர் டேவிட்டும் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, என் பெற்றோரைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர். டேவிட் என் கைப்பேசியைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்துவிட்டார். என்னையும் அடிக்க முயன்றார்,” என்று பிரியங்கா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்போது நடந்த கைகலப்பில் தாம் அணிந்திருந்த உடைகள் கிழிந்துவிட்ட நிலையில், தம்மை நிர்வாணமாகப் படம்பிடிக்க முயற்சி நடந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ள பணிப்பெண் பிரியங்கா, டிம்பிள் வீட்டில் இருந்து எப்படியோ தப்பித்து வந்து புகார் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
‘நான் காலில் அணிந்திருக்கும் காலணிக்குக்கூட நீ நிகரில்லை’ என்று டிம்பிள் தன்னைத் திட்டியதாக பிரியங்கா குறிப்பிட்டிருந்ததுதான் சமூக ஊடகவாசிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
காவல்துறை இப்புகார் குறித்து விசாரிக்க உள்ள நிலையில், டிம்பிள் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.
தற்போது 27 வயதாகும் டிம்பிள், ‘ராமபாணம்’, ‘கிலாடி’, ‘யுரேகா’, ‘கடலகொண்ட கணேஷ்’, ‘தேவி-2’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.