தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காட்டில் சில நாள்கள் வாழ்ந்தது மறக்க முடியாத அனுபவம்: மாளவிகா மோகனன்

2 mins read
6d1f9b7d-87cd-4da5-b76d-10fbdb8c37ef
நடிகை மாளவிகா மோகனன். - படம்: ஊடகம்

மாளவிகா மோகனன் (படம்) ‘ஹிருதயபூர்வம்’ என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பிற்காகக் காட்டில் இருந்த அனுபவம் மிகவும் அருமையானது என்று பதிவிட்டு இருக்கிறார்.

தெலுங்கில் பிரபாசுடன் ‘தி ராஜா சாப்’, தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

‘ஹிருதயபூர்வம்’ என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பு காட்டுப் பகுதியில் நடைபெற்றபோது கிடைத்த இடைவெளியில் தேக்கடியை சுற்றிப் பார்த்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.

“அங்குள்ள அடர்த்தியான காட்டில் வசிக்கும் பறவைகளின் இனிய குரலைத் தினமும் கேட்ட பிறகுதான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.

“இனிமையான காட்டுப்பூக்களின் மணம் பரவிய காற்றைச் சுவாசித்தேன். காலையில் எழுந்தவுடன் வெறும் கால்களில் புல்லில் நடந்தேன். இயற்கை ஒலிகளுக்கு மத்தியில் அமைதியாக உறங்குவது எல்லாமே எனது வாழ்க்கையில் ஓர் இனம் புரியாத அதிசயமாக இருந்தது.

“நகரங்களில் கிடைக்கின்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்குப் பதிலாக, இங்கு கனிம வளங்களால் ஆன நீரை குடிப்பது, காலையில் எழுந்து பார்க்கும்போது மயில், வான்கோழி போன்றவை குடிசையை சுற்றி வருவது எல்லாமே அதிசயமாக இருந்தது.

“உலகின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேக்கடியில் எனது நாட்ள்கள் அதிக மகிழ்ச்சியுடன் கழிந்தன. இரவில் வெகுதூரத்தில் யானைகளின் சத்தத்தைக் கேட்டபோது நானும், மற்றொரு நடிகையும் அதிர்ச்சி அடைந்தோம்.

“நான் பல மலைப் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தப் படப்பிடிப்பின்போது அந்தக் காட்டில் சில நாள்கள் வாழ்ந்தது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,” என்று மாளவிகா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை