தாம் யாருக்கும் எந்த வகையிலும் தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார் சமந்தா.
நடிக்க வந்த புதிதில், தம்மை எவ்வளவு பெரிய நிறுவனங்கள் நடிக்க அழைக்கின்றன என்பதில்தான் தமது வெற்றி அடங்கியுள்ளது என நினைத்ததாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 15 நிறுவனங்கள் அளித்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகவும் அண்மைய பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.
“நான் 20 வயதில் இந்தத் துறையில் நுழைந்தேன். அப்போது என்னுடைய எண்ணமெல்லாம், எத்தனை பிராண்டுகள் நம்மை அணுகி, நம் முகத்தை அவர்களின் பிராண்டுக்காக தேர்வு செய்கிறார்கள் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது என நினைத்தேன்.
“பல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விளம்பரத் தூதராக என்னை நியமிக்க விரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இப்போது நான் தவறான பொருள்களைத் தேர்வு செய்து, தவறான உதாரணமாக முடியாது.
“சிறு வயதில் முட்டாள்தனமாக செயல்பட்ட சமாந்தாவிடம் இப்போது உங்கள் முன் நிற்கும் சமந்தா மன்னிப்புக் கேட்க வேண்டும். என் தேர்வுகள் குறித்து நான் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
“எனக்கு சரியானது எனத் தோன்றுவதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். அதனால், இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு விளம்பரத்திலும் இடம்பெறும் பொருள்கள் குறித்து மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன்.
“மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையின் அடிப்படையில் வாய்ப்புகளை ஒப்புக்கொள்கிறேன். இளம் வயதிலிருந்து என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“வெற்றி என்பது எப்படியும் நம்மை வந்து சேரும். அதற்காக நாம் எந்த வகையிலும் தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது,” என்று சமந்தா கூறியுள்ளார்.
மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை மட்டுமே எடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சரும நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் சமந்தா.
பின்னர், ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்குப் படம் மூலம் திரையுலகில் இரண்டாவது சுற்றைத் தொடங்கியுள்ள அவர், இப்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.