தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனுஷை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா

2 mins read
ff06b777-e22a-468d-8cbb-1c75dff21375
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் வரும் காட்சி. - படம்: ஊடகம்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற காதல் கதைக்களத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக அனிகா சுரேந்திரனும் பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். அவரின் இசையில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோ’, ‘ஏடி’, ‘காதல் ஃபெயில்’ ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ (NEEK) படத்தைப் பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில், “நமது அனைத்துலக நடிகர், இயக்குநர் தனுஷுடன் ‘NEEK’ திரைப்படத்தைப் பார்க்கும் சிறப்பு வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு பொழுதுபோக்கான, வேடிக்கையான அதே வேளையில் உணர்ச்சிகரமான தனித்துவமான திரைப்படம்.

“ஒரு கேள்வி சார், உங்களது நெருக்கடியான வேலைகளுக்கு நடுவில் எப்படி இந்த களிப்பான படத்தை எடுத்தீர்கள், அதுவும் ‘ராயன்’ படம் முடிந்த உடனேயே?

“என்ன ஒரு இயக்கம்? படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ள, நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளீர்கள்,” என எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், “நேரம் எடுத்து எங்கள் திரைப்படத்தைப் பார்த்ததற்கு மிக்க நன்றி சார். உங்களுக்கு படம் பிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி, எங்கள் குழு உங்களது வாழ்த்தால் மிகவும் உற்சாகமடைந்துள்ளது,” எனப் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

இத்திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்நிலையில் இறுதி நேரத்தில் நடந்த மாற்றங்களால் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். அதில் தனுஷே நடிக்கவும் செய்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நித்யா மேனன் ஒரு பேட்டியில் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான வேடம் கிடைத்திருக்கிறது. ‘இட்லி கடை’ திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் இதயத்தை தொடும் படமாக இருக்கும். முக்கியமாக உணர்ச்சிகரமாகவும் அந்த உணர்வுகள் ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைக்கும்படியாகவும் இருக்கும்,” என்றார்.

இப்படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று அவரும் அவரது ரசிகர்களும் உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே தனுஷின் கைகளில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. ‘போர்தொழில்’ இயக்குநருடன் ஒரு படம், ‘அமரன்’ பட இயக்குநருடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம், வெங்கி அட்லூரியுடன் ஒரு படம், இந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதனுஷ்