முன்னணி நடிகையும் பாடகியுமான ஷ்ருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம், எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஒருமுறை திருமணம் செய்துகொள்ள தாம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும் அந்த அனுபவம் தனக்குப் பயத்தை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வாழ்க்கையில் ஒரு நல்ல துணை அமைவதை தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சமூகத்தின் வழக்கமான வளையத்துக்குள் தன்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“ஒரு துணையுடன் இணைந்து வாழ்வதும் தினமும் ஒருவரையொருவர் நேசிப்பதும்தான் முக்கியமே தவிர, திருமணத்திற்கான சட்டபூர்வ ஆவணங்கள் அல்ல,” என்கிறார் ஷ்ருதி.
மேலும், ஆடம்பரத் திருமணங்களில் தமக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ள அவர், யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்கிறோம் என்று புரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பணத்தை ஆதரவற்ற தொண்டு நிறுவனங்களுக்குத் தானமாக வழங்கலாம் என்ற யோசனையையும் வலியுறுத்தியுள்ளார் ஷ்ருதி.
திருமண அமைப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும், தாய்மை அடைவதில் தனக்கு அதிக ஆர்வம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கோ அல்லது உயிரியல் ரீதியாகத் தாயாவதற்கோ தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தனது கலைப் பயணம், வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் இணைந்து ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் ஷ்ருதி.
