லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. முன்பே அறிவித்த தேதியில் படம் வெளியாவது உறுதி என்கிறது தயாரிப்புத் தரப்பு.
இதில் ஷ்ருதிஹாசன் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது தொடர்பாக பலவிதமான தகவல்கள் தொடர்ந்து வெளியாயின. ஒருவேளை ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பாரோ என்கிற அளவுக்கு சிலரது கற்பனை விபரீதமாக விரிந்தது.
இந்நிலையில், ரஜினியின் மகள் வேடத்தில் நடிக்கிறார் என்கிறது அண்மைய தகவல். கதைப்படி, சத்யராஜின் மகளாக வருவாராம் ஷ்ருதி. அதேசமயம், இவர் உண்மையில் யார் என்பது தொடர்பாக படத்தின் இறுதிப்பகுதியில் திடீர் திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
“ஒருவேளை ரஜினியின் மகள்தான் ஷ்ருதிஹாசன் என்பார்களோ...” என்று சில ரசிகர்கள் இத்தகவல் குறித்து சமூக ஊடகங்களில் நையாண்டிப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
தனது கதாபாத்திரம் குறித்து ஊடகங்களிடம் எந்தத் தகவலும் தெரிவிக்கக் கூடாது என ஷ்ருதியிடம் கண்டிப்புடன் கூறியுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.
தமிழில் ‘லாபம்’ படத்திற்குப் பின், ஷ்ருதிக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
அதனால் சில காலம் காத்திருந்தவர், வேறு வழியின்றி தெலுங்குப் பக்கம் சென்றுவிட்டார்.
இதற்கிடையே, இந்தியில் வாய்ப்புகளைத் தேடும் முயற்சியிலும் பெரிய முன்னேற்றம் இல்லை. ஹாலிவுட் பக்கம் போகலாம் என்றால் அதற்குள் சூழ்நிலை சரிப்பட்டு வரவில்லையாம்.
தொடர்புடைய செய்திகள்
அந்த நேரத்தில்தான், லோகேஷ் கனகராஜ் தொடர்புகொண்டுள்ளார். ரஜினி படம் என்றதும் முதலில் தயங்கினாராம். சிபாரிசு காரணமாக வாய்ப்பு கிடைத்ததாக சிலர் விமர்சிக்கக்கூடும் என்பதே ஷ்ருதியின் தயக்கத்துக்குக் காரணம்.
எனினும், லோகேஷ் சொன்ன கதையைக் கேட்ட பிறகு எதுகுறித்தும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல்.