தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய இசை: ஷ்ருதி

3 mins read
a6779d37-ba33-49f1-95b1-a03c2da3ca8e
ஷ்ருதிஹாசன். - படம்: ஊடகம்

ஷ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துவிட்டதாம். படம் எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்கிறார்.

“இது ஒரு சைக்காலஜி திரில்லர் படம். இதற்கான கதையை எழுதியவர் மட்டுமல்ல, படத்தின் இயக்குநரும்கூட பெண்தான். பொதுவாக எனது படங்களுக்கான படப்பிடிப்பில் என் உதவியாளர்கள் தவிர வேறு பெண்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர், அவரது உதவியாளர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப ஊழியர்கள் என்று அனைவருமே பெண்கள்தான். என்னுடைய படப்பிடிப்பு தளத்துக்கு இத்தனை பெண்கள் திரண்டு வந்து பணியாற்றியது இதுவே முதன் முறை. படத்தை திரையில் காண நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் ஷ்ருதி.

இவரது தங்கை அக்‌ஷரா சென்னையில் தனியாக வசிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும் மும்பையில் உள்ள தன் தங்கை, புதுப்படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் ஷ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

இசை மீதான ஷ்ருதியின் ஆர்வம் ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போதே தொடங்கிவிட்டது. முதலில் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றுள்ளார். அதன் பிறகுதான் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரம் சங்கீத பயிற்சியில் ஈடுபடுவாராம்.

“அதன் பிறகு மாலை மீண்டும் ஒருமணிநேரப் பயிற்சி. ஆக, ஒரு நாளில் ரெண்டு மணி நேரம் இசைதான். இந்தக் கடினமான பயிற்சியால் என் குரல் தனித்துவமாச்சு. கட்டுக்கோப்பான ஒரு வாழ்க்கை உருவானது. என் வாழ்க்கைத் தருணங்களே மாறிவிட்டன.

“அதன்பின், அமெரிக்காவில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து, அங்கே மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். எல்லாரையும்போல எனக்கும் மன அழுத்தங்கள் ஏற்படும். ஆனால் அவற்றில் இருந்து விடுபட இசையும் எனது பாடல்களும் உதவும் என முழுமையாக நம்புகிறேன்,” என்று ஷ்ருதி தெரிவித்துள்ளார்.

இவரது அடுத்த இசை நிகழ்ச்சி லண்டனில் நடைபெற உள்ளது. அவரது ஆங்கிலப் பாடல்களுக்கு இசையமைக்கும் அதே இசைக்குழுதான் லண்டன் நிகழ்ச்சியிலும் இசைக்க உள்ளதாம்.

தந்தை கமல்ஹாசனின் இசையார்வம் அலாதியானது என்று சிலாகிப்பவர், தன் தந்தையின் இசை அறிவையும் பாடும் திறனையும் மெச்சிக்கொள்கிறார்.

“அப்பா வீட்டில் இருக்கும்போது அடிக்கடி பழைய ஆங்கிலப் பாடல்களை அழகாகப் பாடிக் காட்டுவார், ‘இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறாயா பாப்பா?’ என்று அவர் கேட்கும் தருணம் என்னையே மறந்து போவேன். அவர் பாடும் விதமும் என்னை இவ்வாறு கேட்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள்.

“அப்பாவும் நானும் தொலைபேசியில் பேசியதைவிட பாடியதுதான் அதிகம் என நினைக்கிறேன். அவை மனத்துக்கு மிக நெருக்கமான தருணங்கள்.

“எனக்கும் அப்பாவுக்கும் வாசனைத் திரவியங்கள் (பர்ஃபியூம்) என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு படத்துக்கும் புதுப்புது வாசனைத் திரவியங்களைத்தான் பயன்படுத்துவேன். இது எதார்த்தமாக ஏற்பட்ட ஒரு பழக்கம்.

“எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள ‘பர்ஃபியூம்’ கடைகளுக்குத்தான் முதலில் செல்வேன். அப்பாவுக்கு நான் அதிகமாக பரிசளித்ததும் அவர் எனக்கு அதிகம் அளித்ததும் ‘பர்ஃபியூம்’கள்தான். நெருக்கமானவர்கள் என்று நான் நினைப்பவர்களுக்கு அதைத்தான் எனது பரிசாக அளிக்கிறேன். என் நண்பர்களுக்கு இது குறித்து தெரியும்,” என்று ஷ்ருதிஹாசன் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்