எளிய மனிதர்களின் போராட்டத்தைச் சொல்லும் ‘சிக்மா’

எளிய மனிதர்களின் போராட்டத்தைச் சொல்லும் ‘சிக்மா’

1 of 2
படம்: விகடன்
படம்: விகடன்

18 Jul 2026 - 3:58 pm

3 mins read

ஒரு படத்திற்கான கதையை எங்கே தொடங்குவது, எங்கே முடிப்பது, எப்படி கதையைச் சொல்வது என்பது, ஒரு சுவாரசியமான விளையாட்டைப் போன்றது என்கிறார் அறிமுக இயக்குநரும் முதல்வர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய்.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் விரைவில் திரைகாண உள்ளது. இப்போதே பலரும் நாயகனாக நடிக்கக் கேட்டு அணுகுகிறார்களாம். முதல் படம் வெளியாகட்டும் அதன் பிறகுதான் நடிப்பு குறித்தெல்லாம் யோசிக்க வேண்டும் என்கிறார் ஜேசன் சஞ்சய்.

சிறு வயது முதல் நிறைய படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்ததாம். தாம் பார்த்த படத்தின் கதையை நண்பர்களிடம் ஆர்வமாக விவாதிப்பாராம்.

தாம் இயக்குநரானதற்கு அதுதான் தொடக்கப்புள்ளி எனக் கருதுவதாகச் சொல்கிறார் ஜேசன் சஞ்சய்.

கனடாவில் திரைத்துறை சார்ந்த படிப்பு, பயிற்சியை மேற்கொண்டபோது 170 பக்கத்திற்கு ஒரு கதை எழுதியுள்ளார். அச்சமயம் அதை முழுநீளப் படமாக எடுக்கும் சூழல் இல்லை என்பதால் 20 நிமிட குறும்படமாக எடுத்துள்ளார்.

“அதன்பிறகு பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் தயாரிப்பாளர் தமிழ் குமரனுடன் அறிமுகமாகி அவரிடம் ஒரு கதையைச் சொன்னேன். அவர் மூலமாக சுபாஷ் கரணைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்குப் பிடித்துப்போன கதைதான் ‘சிக்மா’வாக மாறியுள்ளது.

“நிலம், நீர், காற்று முக்கியமாகப் பணம் ஆகியவற்றின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஆனால், நமக்கும் நம் உறவுகளுக்கும் எந்த மதிப்பும் இல்லை. ஏன் இந்த நிலைமை என்ற கேள்விக்கான பதில்தான் இந்தப்படம்.

“நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று முடிவு செய்து வாழ்க்கையைக் கடந்து போகிறோம். ஆனால், சிலரோ தடைகளை உடைத்து, திறமை, தனித்துவத்தை, பலத்தை வெளிப்படுத்திப் போராடி வெற்றி பெறுவார்கள். அவ்வாறு போராடும் எளிய மனிதர்களின் கதைதான் ‘சிக்மா’,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் புதுத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ஜேசன் சஞ்சய்.

மேலும் சுருக்கமாகச் சொல்வதானால் மற்றவர்கள் உன்னை நம்புகிறார்களோ இல்லையோ, உன்னை நீ நம்பு என்பதுதான் ‘சிக்மா’வின் கதை.

உணர்வுபூர்வமான திருப்பங்களைக் கொண்ட கதைக்களமாம். பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களைத் திரையில் எதிர்பார்க்க முடியுமாம்.

‘சிக்மா’ படத்தின் படக் கதைக்கு நடிகர் சந்தீப் கிஷன்தான் பொருத்தமாக இருப்பார் என்று தாம் தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டதாகச் சொல்கிறார் ஜேசன்.

“ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணப் பயணம். சந்தீப் எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக இருப்பார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படத்தை உருவாக்க நினைத்தபோது சந்தீப்தான் எங்கள் முதல் தேர்வாக இருந்தார். அவருக்கும் ‘சிக்மா’ படக்கதை, கதாபாத்திரம், திரைக்கதை ஆகிய அனைத்தும் பிடித்திருந்தது. எனவே, கதை கேட்ட உடனேயே நடிக்க சம்மதித்தார்.

“கதாநாயகி ஃபரியா அப்துல்லா தெலுங்கில் நடித்த படத்தைப் பார்த்த பிறகு அவரை ஒப்பந்தம் செய்தோம். மிக அழுத்தமான, உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நன்றாகப் பங்களித்துள்ளார்.

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடன இயக்குநர் ராஜுசுந்தரம் படம் முழுவதும் மிரட்டலான கதாபாத்திரத்தில் வருகிறார். சிறு வயதில் நான் திரையில் பார்த்து வியந்துள்ளேன். எனது படத்திற்காக கதை சொல்லி நானே இயக்கியது மகிழ்ச்சி அளித்துள்ளது,” என்கிறார் ஜேசன் சஞ்சய்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்விஜய்திரைப்படம்இயக்குநர்