துபாயில் இவ்வாண்டுக்கான தென்னிந்திய அனைத்துலகத் திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா சனிக்கிழமையன்று (செப்டம்பர் 6) நடந்தது.
திரையுலகில் 25 ஆண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டிவரும் திரிஷாவின் திரைத்துறை பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
விழாவில் விருதைப் பெற்றுக்கொண்ட திரிஷாவிடம் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி அவர்குறித்து ஓரிரு வார்த்தைகள் பேசும்படி கூறினர்.
அதற்கு சிரித்தபடியே, “விஜய்யின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரின் கனவு எதுவாக இருந்தாலும் அது நினவாக வேண்டும்,” எனத் திரிஷா வாழ்த்தினார்.
திரையுலகிற்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கியதற்காகப் பழம்பெரும் நடிகர் சிவக்குமாருக்கு விருது வழங்கி சிறப்பித்தனர்.
இதற்கிடையே, தமிழில் ‘அமரன்’ படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன.
சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் அப்படம் விருதுகளைத் தட்டிச்சென்றது.
மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் சிறந்த பாடகர் விருது ஹரிசரனுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது சாய்க்கும் ‘அமரன்’ படத்திற்காக வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
‘மகாராஜா’ படத்தில் வில்லனாக நடித்த அனுராக் கஷ்யப்புக்குச் சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது. பால சரவணனுக்குச் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது ‘லப்பர் பந்து’ படத்திற்காகக் கிடைத்தது.
சிறந்த இயக்குநர் கிரிடிக்ஸ் சாய்ஸ் விருது ‘மகாராஜா’ படத்திற்காக நிதிலன் சாமிநாதனுக்கும், ‘மெய்யழகன்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான கிரிக்டிஸ் சாய்ஸ் விருது கார்த்திக்கும், சிறந்த நடிகைக்கான க்ரிக்டிஸ் சாய்ஸ் விருது ராயன் படத்திற்காக துஷாராவுக்கும், ஸ்பெஷல் ரைசிங் ஸ்டார் விருது ஹரிஷ் கல்யாணுக்கு ‘லப்பர் பந்து’ படத்திற்காகக் கொடுக்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது கலையரசனுக்கு வாழை படத்திற்காகத் தரப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை அபிராமி ‘மகாராஜா’ படத்திற்காக வென்றார்.
ஃபிரெஷ் ஃபேஷ் சிறப்பு விருது சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கு ‘லப்பர் பந்து’ படத்திற்காகக் கிடைத்தது.
சிறந்த புதுமுக இயக்குநர் விருதை ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவும் ‘சிறந்த புதுமுக நடிகை விருதை ‘லவ்வர்’ படத்திற்காக ஸ்ரீ கௌரி பிரியாவும் சிறந்த பாடகிக்கான விருது ‘தங்கலான்’ படத்திற்காகச் சிந்தூரியும் தட்டிச்சென்றனர்.
செப்டம்பர் 5ஆம் தேதி நடந்த தெலுங்கு, கன்னடத் திரைப்படத்திற்கான ‘சைமா’ விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை ‘பத்மஸ்ரீ’ கமலஹாசன் பெற்றார்.
தெலுங்கில் ‘புஷ்பா - 2’ படத்திற்காகச் சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜூனுக்கும் சிறந்த நடிகை விருது ராஷ்மிகா மந்தனாவுக்கும் வழங்கப்பட்டன.

