தனது பிறந்தநாளையொட்டி தான் அடுத்தடுத்து நடிக்க உள்ள மூன்று புதுப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. இதையடுத்து அந்தப் படங்களை இயக்கும் மூன்று இயக்குநர்களுடன் இணையம் வழியில் அவர் உரையாடினார்.
அப்போது தம் நடிப்பில் உருவாகும் 50வது திரைப்படத்தை தாமே இயக்க வேண்டுமென முடிவு செய்திருந்ததாகவும் அத்திட்டத்தை தற்போது கை விட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“என்னுடைய ஐம்பதாவது படத்துக்கான வேலைகளை தொடங்கியபோது அதை முடிக்க இயலுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் எங்களுடன் இணைந்தது புதிய நம்பிக்கையை கொடுத்தது.
“தற்போது செயற்கைக்கோள் உரிமம், ஓடிடி உரிமம் ஆகியவை குறைவான தொகைக்குத்தான் விற்கப்படுகின்றன. இதைக் காரணமாக வைத்து படத்தின் தரத்தை நிலைநிறுத்தும் அம்சங்களை குறைக்க முடியாது அல்லவா ?
“அவ்வாறு செய்தால் ஒரு திரைப்படத்தை நாம் எதிர்பார்த்தது போல் உருவாக்க முடியாது. இதை மனத்தில் கொண்டுதான் நானும் இப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்தோம்.
“இது குறித்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துடன் பேசியபோது அவர்கள் ஒப்புக்கொண்டனர்,” என்றார் சிம்பு.
தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, மனோஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுவரை இப்படத்தில் இணைந்துள்ள யாருமே சம்பளம் வாங்கவில்லையாம்.
“யாருடனும் இதுவரை ஒப்பந்தம்கூட செய்து கொள்ளவில்லை பொதுவாக குறைந்த செலவில் உருவாகும் படங்களில்தான் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். ஆனால் பெரும் பொருள் செலவில் உருவாகும் இந்த படத்துக்கும் பலர் உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
“நீண்டநாள்களாக இந்தப் படத்தின் நிலைமை குறித்து தெரிந்து கொள்ள என் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இயக்குநர் தேசிங்கு பெரியசாமியும் இத்தனை நாள்களாக காத்துக்கிடந்தார்.
“அவரை விட்டுவிட்டு நான் எப்படி வேறு படத்தில் நடிக்கச்செல்ல முடியும். அதனால் தான் எனது கடைசி படம் வெளியாகி இத்தனை நாள்களுக்குப் பிறகு புதுப்பட அறிவிப்புகளை வெளயிட்டுள்ளேன்,” என்று விளக்கம் அளித்தார் சிம்பு.
பெரிய பட்ஜெட் படம் என்பதால் ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படைப்பா என்று பலரும் கேட்கிறார்களாம். கண்டிப்பாக இது அத்தகைய படமில்லை என்றாலும், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படைப்பாக இருக்கும் என்கிறது சிம்பு தரப்பு.
“இந்தப்படத்தை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால்தான் இவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது. என்னுடைய திரைப்பயணத்தில் 50வது படம் வித்தியாசமானதாக இருக்க வேண்டுமென எல்லோரையும் போல் நானும் ஆசைப்பட்டேன்.
“அது இப்போது நிறைவேறியுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு கூட திரு.கமல்ஹாசனுடன் பேசினேன். ‘தக்லைப்’ படத்தை பார்த்து விட்டு என்னை வாழ்த்தினார். அந்தப்படம் வரும் ஜுன் மாதம் திரைக்கு வரும்,” என்று குறிப்பிட்ட சிம்பு தேசிங்கு பெரியசாமி படத்துக்காகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமுடியை வளர்த்ததாகத் தெரிவித்தார்.
தலை முடியை பராமரிக்க தினமும் இரண்டு வேளை குளிப்பாராம். அது மிகவும் கடினமாக இருந்ததாம்.
“நீளமாக முடி வளர்ப்பதும் இதற்காக மெனக்கெடுவதும் அவ்வளவு எளிதல்ல. இதற்காகவே பெண்களையெல்லாம் கையெடுத்து கும்பிட வேண்டுமென தோன்றியது,” என்றார் சிம்பு.

