‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று தொடர்ந்து ஆவலுடன் கேட்டு வந்த தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இரண்டாம் பாகத்தில் தனுஷுக்குப் பதிலாக சிம்பு நடிக்க இருப்பதாக வெளியான தகவல்தான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
‘தக் லைஃப்’ படத்தின் தோல்வி சிம்புவுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாம். இந்தத் தோல்வி அவரும் மணிரத்னமும் இணைவதாக இருந்த அடுத்த படத்துக்கும் தடை போட்டுவிட்டது.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். எதிர்பாராத அந்த அழைப்பின்போது இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
“வெற்றிமாறன் கூறிய கதைச் சுருக்கம் பிடித்துப் போனதால் உடனடியாக கால்ஷீட் ஒதுக்கிவிட்டாராம் சிம்பு. இது ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை என்பதுதான் கவனிக்க வேண்டிய அம்சம்.
“சிம்புவை வைத்து படம் எடுத்தால் தனுஷ் கோபித்துக்கொள்வார் என வெற்றிமாறனுக்குத் தெரியாதா? அதனால்தான் வட இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியில் படப்பிடிப்பில் இருந்த தனுஷை தேடிப் பிடித்துச் சந்தித்துள்ளார் வெற்றிமாறன்.
அப்போது, ‘வடசென்னை 2’, சிம்பு குறித்து அவர் விவரங்களைக் கூற, சிரித்தபடியே, ‘படம் சிறப்பாக உருவாக வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார் தனுஷ்,” என்று மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணன் கூறியுள்ளார்.
அதேசமயம், சிம்பு நடிப்பது ‘வடசென்னை 2’ படம் அல்ல என்றும் அவரிடம் வெற்றிமாறன் கூறியது வேறு கதை என்றும் மற்றொரு செய்தியாளரான பிஸ்மி தெரிவித்துள்ளார்.
முதல் தகவல் அதிர்ச்சி அளித்த நிலையில், இரண்டாவது தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
ஏன், வெற்றிமாறனால் தனுஷுக்காக காத்திருக்க முடியாதா? தனுஷ் அடுத்தடுத்து வேறு படங்களில் நடிப்பதால் ‘வடசென்னை 2’ தாமதமாகிறது.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாகத் தகவல்.
மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலவுவதால் அவருக்கு பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.
இந்தச் சமயத்தில் புதுப் படம் தொடங்கினால், அந்த நெருக்கடியின் தாக்கம் சற்றே குறையும் என்பதால்தான் சிம்புவை அவர் அணுகியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை தாணு தயாரிக்க உள்ளார். வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டு படம் உருவாகிறது.
அடுத்த சில நாள்களில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் இது குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகும் என்றும் கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, காலஞ்சென்ற பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கும் முயற்சியும் தொடங்கியுள்ளது.
சந்திரபாபு பாத்திரத்தில் நடிக்க தனுஷையும் சூரியையும் அணுகியுள்ளனர். இருவருக்குமே இப்படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறதாம்.
எனினும், மற்ற அம்சங்களையும் தீவிரமாக ஆராய்ந்த பின் பதில் அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்தப் படத்துக்காக பழைய சென்னை உட்பட அனைத்தையுமே பழையதாகக் கொண்டு வர வேண்டும் என்பதால் பட்ஜெட்டும் எகிறக்கூடும் என்கிறார்கள்.