‘அரசன்’ படத்தில் ‘மதுரை டைகர்’ கதாபாத்திரத்தில் அசத்தும் சிம்பு

‘அரசன்’ படத்தில் ‘மதுரை டைகர்’ கதாபாத்திரத்தில் அசத்தும் சிம்பு

2 mins read
a0f35a5b-1c1c-40da-b9d3-233a85e36422
‘அரசன்’ படத்தில் மூன்று விதமான முற்றிலும் மாறுபட்ட தோற்றங்களில் நடித்து வருகிறார் சிம்பு. - படம்: மின்னம்பலம்

இயக்குநர் வெற்றிமாறன் தனது ‘பொல்லாதவன்’ திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பே எழுதிய கதைக்களத்தை வைத்து உருவாகிறது ‘அரசன்’.

வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வடசென்னைப் பின்னணியைக் களமாகக்கொண்டு உருவாகும் இத்திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் முடிக்கும் திட்டத்துடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதில் சிம்பு மூன்று விதமான முற்றிலும் மாறுபட்ட தோற்றங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் சிறப்பு விளம்பரக் காணொளியில் சிம்புவின் இளமையான தோற்றமும் 45 வயது மதிக்கத்தக்க மற்றொரு தோற்றமும் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலானது.

கதைப்படி, மதுரையில் வாழும் ஒரு விளையாட்டு வீரர் எதிர்பாராத சூழல் காரணமாகச் சென்னைக்கு வர நேரிடுகிறது. அதன் பின்னர் வடசென்னையில் நடக்கும் அதிரடிச் சம்பவங்களே ‘அரசன்’ படத்தின் கதை என்கிறார்கள்.

படத்தில் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நிறைவடைந்த நிலையில், அதில் சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.

தற்போது, படத்தின் ஒரு மணி நேரக் காட்சிகளைத் தொகுத்து சிம்பு, தயாரிப்பாளர் தாணு ஆகியோருக்கு இயக்குநர் வெற்றிமாறன் திரையிட்டுக் காட்டியுள்ளார்.

காட்சியமைப்புகள், கதாபாத்திர வடிவமைப்பால் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளாராம் சிம்பு. தனது அடுத்தடுத்த தோற்றங்களுக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்யத் தொடங்கி உள்ளாராம்.

இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, விக்ராந்த், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் விரைவில் அவர் படப்பிடிப்பில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படம், சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்