சிம்பு இப்போதெல்லாம் மிகவும் மாறிவிட்டார் என்று அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தேகமின்றிச் சொல்கிறார்கள்.
படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை, இயக்குநருக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை, கால்ஷீட் குளறுபடி என்று ஒரு காலத்தில் சிம்பு பற்றி குறைகூறாதவர்களே கோடம்பாக்கத்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களுக்கு முன்பு ஆளாகினார் சிம்பு.
இப்போது அதில் திடீர் மாற்றம். ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை அவரது நலன்விரும்பிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் வரவேற்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு
நல்ல பிள்ளையாக மாறிய சிம்புவைத் தேடி பல நல்ல பட வாய்ப்புகள் வருவதில் வியப்பேதும் இல்லை.
தனது 50ஆவது படத்தைத் தாமே இயக்கும் முடிவை சிம்பு கைவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘பராசக்தி’ படத்தை இயக்கி வருகிறார் சுதா. இதில், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு முடிந்துவிடும் எனத் தகவல்.
இதையடுத்து சிம்புவை இயக்கத் தயாராகி வருகிறார் சுதா கொங்கரா.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்துக்கான கதை ‘வேட்டை நாய்’ என்ற நாவலைத் தழுவி எழுதப்பட்டுள்ளது என்றும் கதைக்கருவும் களமும் சிம்புவுக்குப் பிடித்துப்போய்விட்டது என்றும் கூறப்படுகிறது.
சிம்புவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்.
அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. அந்தப் படங்களில் நடித்து முடித்த பின்னரே சுதா கொங்கராவின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா.
சிம்புவுடன் இணையும் கயாது
இதற்கிடையே, சிம்புவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் இளம் நாயகி கயாது லோஹர்.
‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில்தான் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாது. இதை அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ராம்குமார் படம் முடிந்த கையோடு சிம்பு நடிப்பில் உருவாகும் அவரது ஐம்பதாவது படத்துக்கான பணிகள் தொடங்க உள்ளன.
இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இத்துடன் தனது 51ஆவது படத்தையும் தொடங்குகிறார் சிம்பு. அதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
‘கேங்கர்ஸ்’ படத்துக்குப் பாராட்டு
‘கேங்கர்ஸ்’ படத்தைப் பார்த்த சிம்பு, படக்குழுவைப் பாராட்டி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் இயக்குநர் சுந்தர்.சி, வடிவேலு ஆகிய இருவரும் நகைச்சுவையில் அசத்தி உள்ளனர்.
கேத்தரின் தெரசா நாயகியாகவும் மைம் கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், “நான் ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு சார் அவரது ‘மேஜிக்’கால் மொத்தப் படத்தையும் தன்வசப்படுத்திவிட்டார்.
“சுந்தர்.சி அண்ணாவுக்கும் படக்குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்று சிம்பு தன் பதிவில் குறிப்பிட்டிருப்பது, அப்படக்குழுவினரை மட்டுமல்லாமல், சிம்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.