சிங்கப்பூர் ரசிகர்கள் தனது மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றும் அவர்கள் விருப்பத்திற்காக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சி படைக்க உடனே ஒப்புக்கொண்டேன் என்றும் நடிகரும் பாடகருமான சிலம்பரசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தனது நடிப்பில் வந்த ‘மன்மதன்’ திரைப்படம் தொடக்கத்தில் தமிழ்நாட்டு ரசிகர்களிடையே மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்றாலும், சிங்கப்பூர் ரசிகர்கள் ஆர்ப்பரித்து தம்மை வரவேற்றதையும் அந்த அன்பு தனக்குக் கண்ணீரை வரவழைத்ததையும் நினைவுகூர்ந்தார் சிம்பு.
சனிக்கிழமை (டிசம்பர் 14) சிங்கப்பூர் உள்ளரங்கில் யுவன் ஷங்கர் ராஜா - சிம்பு இணைந்து படைக்கவுள்ள நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதையொட்டி சிங்கப்பூர் வந்துள்ள இருவரும், வியாழக்கிழமை (டிசம்பர் 12) மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, ரசிகர்களுடனும் உரையாடினர்.
தங்களது அன்பைப் பகிர்ந்துகொண்ட ரசிகர்களுடன் உரையாடியதுடன் தாங்கள் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள், இசை நிகழ்வுகள் குறித்தும் பகிர்ந்தனர்.
தாங்கள் அடிக்கடி வந்துசெல்லும் இடம் சிங்கப்பூர் என்றும் மீண்டும் இங்கு இசை நிகழ்ச்சி நடத்துவதில் மகிழ்ச்சி என்றும் சொன்னார் யுவன் ஷங்கர் ராஜா.
“சிம்புவின் குரலில் இருக்கும் ஜீவன், அவரின் பாடல்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது,” என்று பாராட்டிய யுவன், அவருடன் இணைந்து பாடுவது தனக்கு விருப்பம் என்றார்.
இதுவரை தன்னைத் தவிர, யுவனின் இசையமைப்பில் இளையராஜா பாடியுள்ள பாடல்களில் ஒன்று தனது படத்தில் அமைந்தது தனிப்பெருமை என்று சொன்ன சிம்பு, “அவரை என் படத்தில் பாட வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தாலும், சற்றே பயம் இருந்தது. அவர் பாடியதும் அது பெரும் வரவேற்பைப் பெற்றதும் மறக்க முடியாத நினைவு,” என்றார்.
மலேசியாவைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் நேரடியாகப் பாட ஆவலுடன் காத்திருப்பதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.