சிங்கப்பூர் தமிழ் நாடகத்திற்கு உலக அளவில் பாராட்டு

3 mins read
0b8e924b-5753-4406-87e7-9a3175b02be9
சிறப்பான கதை, பயம் தரும் இசை, வியக்கத்தக்க திரைக்கதையெனப் பல விதங்களில் ‘கருவனம்’ நாடகம் கவனத்தை ஈர்த்துள்ளது. - படம்: ஸ்டோரிபாட்ஸ் ஏசியா தயாரிப்பு நிறுவனம்
multi-img1 of 2

‘கருவனம்’ என்னும் சிங்கப்பூர் தமிழ் நாடகத்திற்குத் தற்போது உலக அளவில் பாராட்டு கிடைத்துவருகிறது.

ஆண்ட்ரே போஜஸ் (Andre Borges) என்னும் நபர் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திகில் நாடகங்கள் குறித்து காணொளிகளைப் பதிவிடுவார்.

சில நாள்களுக்கு முன்னர் அவர், தாம் பார்த்து அசந்த திகில் நாடகங்களில் கருவனமும் ஒன்று என்று பதிவிட்டார். சிறப்பான கதை, பயம் தரும் இசை, சுவாரஸ்யமான திரைக்கதை எனப் பல விதங்களில் அந்த நாடகம் நன்றாக உள்ளது என்று போர்க்ஸ் கூறினார்.

இதையடுத்து அந்தப் பதிவு பலரை ஈர்த்தது. அந்தக் காணொளி இன்ஸ்டகிராம் தளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 900,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும், அது ஏறத்தாழ 35,000க்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

‘கருவனம்’ 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வசந்தம் ஒளி வழியில் திரையிடப்பட்டது. ஓராண்டாக்குப் பிறகு அந்த நாடகத்துக்குத் திடீரென இவ்வளவு வரவேற்பு கிடைத்தது குறித்து அதன் இயக்குநர் குமரன் சுந்தரத்திடம் தமிழ் முரசு பேசியது.

“இதனை கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். கடந்த ஆண்டு நாடகம் வெளியானபோது அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு சமூக ஊடகத்தில் பாராட்டப்பட்டது. தற்போது அது மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது மகிழ்ச்சி தருகிறது,” என்றார் 40 வயது குமரன்.

ஸ்டோரிபாட்ஸ் ஏசியா தயாரிப்பில் உருவான ‘கருவனம்’ யூடியூப், மீவாட்ச் தளங்களில் இலவசமாகப் பார்க்க முடிவதால் மக்கள் மத்தியில் எப்போதும் அந்த நாடகம் பிரபலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் (24 பாகங்கள்) கொண்ட ‘கருவனம்’ நாடகம் தயாரிக்க ஓராண்டு எடுத்துக்கொண்டதாகக் குமரன் கூறினார்.

“வசந்தம் ஒளிவழியில் திகில் நாடகங்களுக்கு அனுமதி கிடைப்பது கடினமான ஒன்று. எனக்கும் திகில் நாடகம் எடுப்பதில் பெரிய ஈடுபாடு இல்லை. இருந்தாலும் சிறப்பான கதை ஒன்றைத் தயாரித்து நல்ல திகில் நாடகம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்படி உருவானதுதான் ‘கருவனம்’.

“கதை எழுத மட்டும் ஆறு மாதக் காலம் தேவைப்பட்டது. கதையை 20க்கும் மேற்பட்ட முறை மாற்றி எழுதினேன். படத் தயாரிப்பு 60 நாள்களில் முடிந்தது. பின்னர் காணொளித் தொகுப்பு உள்ளிட்ட வேலைகளுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன,” என்றார் குமரன்.

உளவியல் ரீதியான நாடகங்களை எடுப்பதில் கைதேர்ந்த திரு குமரன், ‘வேட்டை-3’, ‘நிஜங்கள்’, ‘இருவர்’, ‘அறிவான்’ உள்ளிட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநராக உள்ள குமரன் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கதை எழுதுவதிலும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

‘கருவனம்’ வெற்றிக்குக் காரணம் அதில் நடித்த நடிகை நடிகைகள் என்றார் குமரன். “நேரம் பார்க்காமல் உதய சௌந்தரி, வீர ராகவன், ஜெ‌யஸ்ரீ, விக்னே‌ஷ் வடராஜன், கார்த்திகேயன் சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் உழைத்தனர். ஒரு கட்டத்தில் உதயா தனது கதாபாத்திரமாகவே மாறினார்,” என்றார் அவர்.

‘கருவனம்’ நாடகம் நியூயார்க் படம் மற்றும் தொலைக்காட்சி விருது உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளது.

நாடகம் பிரபலமானதால் தனக்கு இந்தியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வாழ்த்துகள் வருவதாகக் குமரன் கூறினார். மேலும் தமிழ், மலையாளத் திரையுலகிலிருந்தும் திரைக்கதை எழுத வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

“வாய்ப்புகள் பல கிடைத்தாலும் சரியாக வேலை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். அதனால், திரையுலகிற்குச் செல்வதற்கு முன்னர் நிதானமாக யோசித்துத்தான் முடிவெடுப்பேன்,” என்றார் குமரன்.

குறிப்புச் சொற்கள்