தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா சென்று படமெடுத்த உள்ளூர்த் தயாரிப்பாளர்

2 mins read
1aaa654b-9806-4121-aba4-fd422116a598
‘முதல் பக்கம்’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் மகேஸ்வரன் தேவதாஸ். - படம்: சின்னதம்பி தயாரிப்பு நிறுவனம்

உள்ளூர் நடிகர் மகேஸ்வரன் தேவதாஸ் நடிப்பிலும் தயாரிப்பிலும் இந்தியாவில் படமாக்கப்பட்டுள்ள ‘முதல் பக்கம்’ எனும் திரைப்படம் ஜூலையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளியீடு காணவுள்ளது.

புலனாய்வு, திகில் திரைப்படமான ‘முதல் பக்கம்’ படத்தில், தொடர் கொலைகளைச் செய்யும் வில்லனாக நடித்துள்ளார் மகேஸ்.

சிங்கப்பூரில் வர்த்தகம் செய்துவரும் இவர், கடந்த ஈராண்டுகளாக இத்திரைப்பட வேலைகளில் ஈடுபட்டு, தற்போது இதை வெளியிடவும் உள்ளதாகச் சொன்னார்.

ஏறத்தாழ $700,000 செலவில், சென்னையிலும் புதுச்சேரியிலும் 42 நாள்கள் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், இந்தியாவில் 100 திரையரங்குகளிலும் சிங்கப்பூர், மலேசியாவிலும் வெளியாகிறது.

இப்படத்தில் நடிகர் வெற்றி, தம்பி ராமைய்யா, ரெடின் கிங்ஸ்லி, ‌ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

“எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது நான் என்னவாக வேண்டும் என ஆசிரியை கேட்டபோது திரைத்துறைக்குள் நுழைய வேண்டும் எனக் கூறினேன். காலப்போக்கில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு, வர்த்தகம் என என் கவனம் மாறியது,” என்றார் மகேஸ்.

“நீண்டகாலத்துக்குப் பிறகு அது நனவானது மகிழ்ச்சி,” என்ற அவர், தமது திரைத்துறைப் பயணம் குறித்துப் பகிர்ந்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் முடங்கியிருந்தபோது பார்த்த இந்திய, தமிழ்த் திரைப்படங்கள் அவரைச் சிந்திக்கத் தூண்டியது.

“தமிழ்த் திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்போர் குறைவாக இருப்பதை உணர்ந்தேன். நான் 2018லிருந்து ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டை வைத்துள்ளேன். தொடர்ந்து கட்டுடலுடன் திகழ்ந்ததால் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்தேன்,” என்றார்.

‘முதல் பக்கம்’ திரைப்படக் காட்சி.
‘முதல் பக்கம்’ திரைப்படக் காட்சி. - படம்: சின்னத்தம்பி தயாரிப்பு நிறுவனம்

தமிழ்த் திரையுலகம் எவ்வாறு செயல்படும் என்பது தெரியாததால் தொடர்ந்து அதுகுறித்து தெரிந்துகொள்ளத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

வர்த்தகம், நிர்வாகம், பேச்சு, எழுத்து எனப் பல துறைகளில் கால்பதித்துள்ள இவர், திரைத்துறையிலும் களமிறங்க முடிவெடுத்தார். தாமே முன்வந்து தமது நிறுவனமான ‘சின்னதம்பி புரொடக்‌‌ஷன்ஸ்’ சார்பில் விளம்பரம் செய்யவும் படத்தை வெளியிடவும் இவர் முடிவெடுத்தார்.

“நான் ஒரு தொழிலதிபர். எல்லாப் பணிகளையும் உத்திபூர்வமாக ஒழுங்குபடுத்தியதால், எனது வேலைகளையும் பட நிர்வாகத்தையும் கையாள முடிந்தது. நிறைய பெருமக்கள் உறுதுணையாகவும் இருந்தனர்,” என்றார் மகேஸ்.

திரைப்படத்துக்காகச் செலவழித்ததை தமது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள செலவு செய்ததாகச் சொன்ன இவர், “அந்தப் பணத்தைக் கொண்டு தரைவீடு வாங்கியிருக்கலாம். ஆனால், ஒருவேளை நினைத்ததைச் செய்திருக்கலாமோ எனும் எண்ணம் எதிர்காலத்தில் வந்துவிடக்கூடாது. நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை. அதில் இயன்ற அளவு உழைத்துச் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்,” என்றார்.

திகில் திரைப்படம் எப்போதும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் மக்கள் வரவேற்பார்கள் என்றும் மகேஸ் எதிர்பார்க்கிறார். இத்திரைப்படம் வெளிவந்தபின் வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து வில்லனாக நடிக்கவும் விருப்பம் தெரிவித்தார் மகேஸ்.

குறிப்புச் சொற்கள்