தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் படமெடுக்கும் உள்ளூர்த் தயாரிப்பாளர்

2 mins read
8aed6cfe-fc6f-45a1-af8f-277d6d7118ee
நடிகை நி‌‌‌ஷா குமார் (இடம்), நடிகரும் தயாரிப்பாளருமான தேவராஜன். - படம்: சுந்தர நடராஜ்

உள்ளூர்த் தயாரிப்பு நிறுவனமான ‘வேவ் ஃபிலிம்ஸ்’, இந்தியா சென்று ஒரு முழுநீளத் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

‘புரோஜெக்ட் டீ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நீண்டகாலக் கனவாக இருந்த இத்திரைப்படம் ஒன்றரை ஆண்டுகால விரிவான பணிகளுக்குப் பின்னர் தொடங்கவுள்ளதாகக் கூறினார் ‘வேவ் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தைத் தோற்றுவித்தவரும், நடிகரும், தயாரிப்பாளருமான தேவராஜன்.

ஆங்கில, கொரிய, ஜப்பானியப் படங்கள் தயாரிப்பில் தமது பங்காளியுடன் இணைந்து ஈடுபட்டுவரும் இவர், “தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்றும் அது அனைத்துலகத் திறமையாளர்களை உள்ளடக்கிய படமாக அமைய வேண்டும் என்றும் விரும்பினேன்,” என்றார்.

இத்திரைப்படத்தில் சிங்கப்பூர், இந்தியா, மலேசியா நாடுகளைச் சேர்ந்தோர் பணியாற்றுவார்கள் என்று கூறிய அவர், இது பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களை இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என நம்புவதாகவும் சொன்னார்.

திகிலான, காவல்துறை தொடர்பான கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தில் பரவலாக அறியப்பட்ட இந்திய நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

“இந்தியா சென்று படமெடுக்க வேண்டும் என முடிவெடுத்ததிலிருந்து அதற்கான கோப்புகள், அனுமதி ஆவணங்கள், வெளிநாட்டு நடிகர்களுக்கானத் திரைப்பட நுழைவுச் சான்று ஆகியவற்றைப் பெறும் பணி சவாலாகவே இருந்தது. சில மாதங்கள் எடுத்தாலும், அவற்றைச் சரிவர முடித்துள்ளோம். படப்பிடிப்பு தொடங்கவுள்ளது மகிழ்ச்சி,” என்றார் தேவா.

அதனை ஓர் இந்தியத் திரைப்படம் போலவே பாவித்து எல்லாப் பணிகளுக்கும் அங்குள்ளோர் உதவுகின்றனர் என்றார் அவர். குற்றாலம், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும் என்றார் அவர்.

இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ‘மஞ்சு’ எனும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மலேசிய நடிகை நி‌‌‌ஷா குமார்.

“நான் காவல்துறை அதிகாரியாக நடிப்பது முதன்முறை. அதிலும் குறிப்பாக இந்தியக் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதால் அவ்வாறான படங்களைப் பார்த்து உடல்மொழிகளைக் கற்றுவருகிறேன். இத்தகைய படத்தில் இடம்பெறுவது பெருமையளிக்கிறது,” என்றார் நிஷா.

இத்திரைப்படம் சிங்கப்பூர், இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் திரையிடப்படும் என்றும், ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார் தேவராஜன்.

“இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு. இது சிறப்பாக அமையும் என நம்புகிறோம். சிங்கப்பூர், மலேசிய நடிகர்களால் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க முடியும் எனக் காட்டுவதற்கான வாய்ப்பு இது. நாம் அனைவரும் பேசும் மொழி ஒன்றுதான். அதே படங்களைத்தான் பார்க்கிறோம். அப்படங்களை இங்கிருந்து சென்றாலும் அதே தரத்துடன் தயாரிக்க முடியும் எனக் காட்டுவதற்கும் இது சிறந்த வாய்ப்பு,” என்றார் அவர்.

“வெளிநாடுகளிலிருந்து வருவோரை இந்தியத் திரையுலகினர் இருகரம் நீட்டி வரவேற்கின்றனர். அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டுகின்றனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

திரைப்படத்தின் பெயர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போன்றவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்றார் தேவராஜன்.

குறிப்புச் சொற்கள்