ஜீசிக்ஸ் மூவிஸ் சார்பில் சிங்கப்பூர் ஜீனத் பர்வீன் இணை தயாரிப்பில் உள்ளூர் எழுத்தாளர் மில்லத் அகமது இயக்கத்தில் உருவாகியுள்ளது இஸ்லாமியச் சமயத்தைத் தழுவிய ஆவணத் திரைப்படம் ‘மீலாதுன் நபி’. இத்திரைப்படம் முழுக்க முழுக்க முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது.
திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் நடிகர்கள் இன்றி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையே முழுக்க முழுக்க பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 10ஆம் தேதி மீலாதுன் நபி திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் விரைவாக நடைபெறுவதாகப் படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான திரு மில்லத் அகமது கூறினார்.
“திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின் ஆதாரத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படம் பள்ளி மாணவர்கள், இளையர்கள், நபிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் காண வேண்டிய பையோபிக் படம்,” என்றார் அவர்.
இப்படத்தின் கதை மூன்று கோணங்களில் சொல்லப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுக் கதாபாத்திரங்கள் மூலமும், சென்னையில் புகழ்பெற்ற இமாம்கள் மூலமும், பத்து பாடல்கள் மூலமும் கதை நகர்கிறது.
படத்தில் உள்ள பாடல்களை நாகூர் ஹனிபா மகன் நெளஷாத் ஹனிபா, ஜென்டில்மேன் சம்சுதீன், யூடியூப் புகழ் ரஹீமா பேகம், விஜய் சூப்பர் சிங்கர் பரிதா ஆகியோர் பாடியுள்ளனர்.
ஒரே ஒரு இசைக்கருவியை வைத்து பக்தி பரவசமூட்டும் வகையில் எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார். லலித் ராகவேந்தரும், மில்லத் அகமதும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் படம் எதிர்பார்ப்பை தாண்டியும் சிறப்பாக தயாராகி உள்ளது என்று படக் குழு தெரிவித்தது.