‘ராப்’ பாடகர், பாடலாசிரியர் அறிவு தனது நீண்ட நாள் காதலி கல்பனாவைக் கைப்பிடித்திருக்கிறார்.
இருவருக்கும் சனிக்கிழமையன்று (ஜனவரி 11) சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இசையமைப்பாளர் இளையராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
சமூக நீதிக்காக தனது ‘ராப்’ பாடல்கள் மூலம் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார் அறிவு.
அண்மையில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டிலும் பாடகர் அறிவின் பங்களிப்பு பலராலும் மெச்சப்பட்டது. விஜய்யும் பாராட்டினாராம்.
இப்படித் திரையிசையிலும் தனியிசையிலும் அசத்தி வரும் அறிவுக்குத் திருமணம் என்றதும் சமூக ஊடகவாசிகள் அவருக்குப் பலவிதமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கணவர் அறிவு போலவே மனைவி கல்பனாவும் ஒரு சமூக செயற்பாட்டாளர்தான்.
இவரும் தன் பங்குக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தனது கருத்துகளைத் தொடர்ந்து பல தளங்களில் பதிவு செய்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அறிவு போலவே இவருக்கும் திரைத்துறையில் ஆர்வம் உள்ளது.
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார் கல்பனா.
அறிவும் கல்பனாவும் நீண்ட நாள்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற தலைப்பில் கடந்தாண்டு இசைத்தொகுப்பை வெளியிட்டார் அறிவு. அதில் 12 பாடல்கள் இடம்பெற்றன. அவற்றுள் ‘தொடாத’ என்ற பாடலுக்கான காணொளியை இயக்கியது கல்பனாதானாம்.