தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்ற பிறகு மேலும் பிரபலமாகி உள்ளார் பின்னணிப் பாடகி கல்பனா.
அவர் குடும்பப் பிரச்சினையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக அண்மையில் வெளியான தகவல் கோடம்பாக்கத்தில் பலரைக் கவலைகொள்ள வைத்தது.
இதையடுத்து, “ஏன் எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது சேற்றை வாரி அடிக்கிறீர்கள். ஏன் தவறான செய்திகளைப் பரப்புகிறீர்கள்,” என்று வருத்தமும் கோபமும் கலந்து பேட்டியளித்துள்ளார் கல்பனா.
அப்படி என்ன நடந்தது?
“என்னைப் பற்றியும் என் கணவர் குறித்தும் ஒரு தவறான தகவல் பரவி உள்ளது. நான் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்யவே இல்லை. எனக்கு 45 வயதாகிறது. உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன.
“பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எவ்வளவு விஷயங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பலர் புரிந்துகொள்வதே இல்லை. ஒரு நல்ல செய்தி பத்து பேரைத்தான் சென்றடைகிறது. ஆனால், அவதூறான செய்தி என்றால் ஆயிரம் பேரைச் சென்றடைகிறது.
“எனக்கு நுரையீரல் பிரச்சினை இருக்கிறது. என் வாழ்க்கையில் நடந்த ஒரே நன்மை எனக்கு நல்ல கணவர் அமைந்ததுதான். அவரால்தான் இன்று நான் உயிரோடு இருக்கிறேன்.
“அண்மையில் கணவருடன் கைப்பேசியில் பேசிக்கொண்டே அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டேன். அதனால் மயங்கி விழுந்தேன். நல்ல வேளையாக என் கணவர் காவல்துறைக்கும் அவசர உதவி வாகனச் சேவைக்கும் தகவல் கொடுத்தார். அதனால் உயிர்பிழைத்து இப்போது நன்றாகத்தான் இருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“ஏன் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களை மட்டமாகப் பார்க்கிறீர்கள். காதில் கேட்க முடியாத சம்பவங்கள் எல்லாம் நம் நாட்டில் நடக்கின்றன. அவற்றைப் பற்றி எல்லாம் பேசாமல், தவறான செய்திகளை யூடியூப் தளத்தில், சமூக ஊடகங்களில் இடம்பெறச் செய்கிறார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது,” என்று செய்தியாளர்களிடம் தன் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார் கல்பனா.

