‘சிறை’ சிறந்த படமாக அமையும்: விக்ரம் பிரபு

3 mins read
bed7bbf7-b5c7-4951-a7dd-282044f96ecd
‘சிறை’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினிமா விகடன்
multi-img1 of 2

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிறை’.

‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் எழுதிய கதையை வைத்து உருவாகி உள்ளது.

இப்படம் விரைவில் திரைகாண உள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் விக்ரம் பிரபு.

அப்போது ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது நன்றாக இருந்தால் மட்டும் போதாது என்றும், குறித்த நேரத்தில் வெளியாவது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

“இதற்கு முன்பு நான் நடித்த ‘லவ் மேரேஜ்’ படம் வெளியாக ஒன்றரை ஆண்டுகள் தாமதமானது. அந்தப் படத்தில் எனக்கான பகுதி, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு எல்லாமே முப்பத்தைந்து நாள்களில் முடிந்துவிட்டது.

“அதில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் ‘காட்டி’ படத்திலும் நடித்து முடித்தேன். பிறகு காலில் அடிபட்டதால் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது,” என்றார் விக்ரம் பிரபு.

‘சிறை’ படம் தமிழில் மட்டுமல்லாமல், ஒரே சமயத்தில் வேறு பல மொழிகளிலும் வெளியாகிறதாம்.

தமிழ்த் திரையுலகில் இருந்து ‘சிறை’ போன்ற நல்ல படைப்புகள் வெளியாவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார். இந்தப் படத்துக்காக படக்குழு அதிகம் மெனக்கெட்டது எனத் தயக்கம் இல்லாமல் கூறலாம்.

“இப்போதெல்லாம் நம் ரசிகர்கள் உலகத் தரத்திலான படைப்புகளை எதிர்பார்க்கிறார்கள். இது நல்லவிதமான எதிர்பார்ப்புதான். வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதைகளைக் கேட்கிறார்கள். அந்த வகையில் இந்த ‘சிறை’ சிறந்த படமாக அமையும்,” என்றார் விக்ரம் பிரபு.

இவர், காவல்துறை உடை அணிந்து நடிக்கும் நான்காவது படம் இது. தொடர்ந்து இவ்வாறு தேர்வு செய்து நடிக்கவில்லை என்றும் ‘சிறை’ படத்தைப் பார்த்தால் கதையை ஏற்று நடித்ததற்கான காரணம் புரியும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை தாம் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில்தான் நடித்திருப்பதாகக் குறிப்பிட்ட விக்ரம் பிரபு, புதுமையான ரசிகர்களைத் திருப்திபடுத்தும் கதையாக இருந்தால் தாம் நடிக்கத் தயங்குவதில்லை என்றும் கூறினார்.

தன் தந்தை பிரபுவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளதாம்.

பிரபுவும்கூட அவ்வப்போது, ‘இருவரும் எப்போது சேர்ந்து நடிப்போம்’ என்று சிரித்தபடி கேட்பாராம்.

“எங்களுக்கு ஏற்ற கதை அமைய வேண்டும். இருவரும் சேர்ந்து நடிக்கும் பட்சத்தில், அப்பாவின் கதாபாத்திரத்தைத்தான் முதலில் கவனிப்பேன். அது நன்றாக இருந்தால்தான் அந்த கதை ஒத்துவரும்.

“வரும் ஆண்டுகளில் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு அமையக்கூடும்,” என்று சொல்லும் விக்ரம் பிரபு, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைத்திறன் நன்கு வளர்ந்துகொண்டே போவதாகச் சொல்கிறார்.

மேலும், ஒரு படம் வெற்றி பெற்றால் அதேபோல் உருவாகும் மற்றொரு படமும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் கூறுகிறார்.

“ரசிகர்கள் பலவிதமான படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். ஒரு சம்பவத்தை, கருத்தை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுக்க முடிப்பதற்குள் மற்றொரு சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதனால் ஒரு நல்ல படத்தைத் தர வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பமாக உள்ளது,” என்று சொல்லும் விக்ரம் பிரபுவுக்கு, தமிழ் மொழியின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் ஒரு படத்தை உருவாக்க ஆசையாம்.

“தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் பூர்வீகம். எனவே, அது குறித்து சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அதற்கான முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். நம்மைப் பற்றி படம் எடுத்தால் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தட்டித் தூக்கிவிடலாம். நம்மை நினைத்து நாம் பெருமைப்பட்டால்தான் சாதிக்க முடியும்,” என்றார் விக்ரம் பிரபு.

குறிப்புச் சொற்கள்