தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவகார்த்திகேயனுக்கு கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டிய 2024

3 mins read
2c182057-86ff-4f6f-af44-87b6aa2f25e7
சிவகார்த்திகேயனின் உயர்வுக்கு உதவிய வேடங்கள். - படம்: ஊடகம்

2024ஆம் ஆண்டு திரைத்துறையில் சிலருக்கு சுமாரான ஆண்டு, சிலருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. சிலரிடம் 2024 குறித்துக் கேட்டால், ‘நோ கமெண்ட்ஸ்’ என்றுதான் பதில் வரும். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு 2024ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான மற்றும் தொடர் வெற்றிகளைக் கொடுத்த ஆண்டாக அமைந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால், சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் பொன் என்பதைப்போல் 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சின்னத்திரையில் இருந்து திரைத்துறைக்கு வந்த சிவகார்த்திகேயன், இன்றைக்கு நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் வலம் வருகிறார். அவருக்கு இந்த ஆண்டு, நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பெரும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது.

அவரது குடும்ப வாழ்க்கையில், அவருக்கு மூன்றாவது குழந்தை ஜூன் 2ஆம் தேதி பிறந்தது. இது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அதுபோல் திரைத்துறையிலும் சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகத்தான் 2024 அமைந்தது.

2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான அவரது ‘அயலான்’ படம், வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறியது. மேலும், பொங்கல் அன்று வெளியான படங்களில் தோல்வியைச் சந்திக்காமல், வாகை சூடியது இந்தப் படம்.

அதன் பின்னர் இவரது தயாரிப்பில், சூரி நடித்து, வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியது.

குறிப்பாக அனைத்துலகத் திரைப்படத் திருவிழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. படம் திரையரங்குகளில் ஓரளவுக்கு வசூல் செய்ததால், தமிழ் ரசிகர்களுக்கு உலகத்தரத்தில் ஒருபடத்தினை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதெல்லாம் ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாலும், தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து விஜய் ரசிகர்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் ஓர் ஆச்சரியத்தைக் கொடுத்தார்.

இந்தப் படத்தில் விஜய், சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, “துப்பாக்கியைப் பிடிங்க சிவா,” எனக் கூறுவதும், விஜய்யைப் பார்த்து சிவகார்த்திகேயன், “சார் நீங்கள் ஏதோ முக்கியமான வேலையாகப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள், இதை நான் பார்த்துக்கொள்கிறேன்,” எனப் பேசுவார். இந்த வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக தளபதி விஜய் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பதாக ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையிலும் அதிகம் பேசப்பட்டது.

அதன் பின்னர் தீபாவளிக்கு வெளியான ‘அமரன்’ படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

‘அமரன்’ படம் திரையரங்குகளில் மட்டும் உலக அளவில் ரூ.350 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய்க்குப் பின்னர் ரூ.300 கோடிகளை வசூல் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்ற சாதனையை ‘அமரன்’ படம் சிவகார்த்திகேயனுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றி மூலம் தனது சம்பளத்தை கிட்டத்தட்ட ரூ.70ல் இருந்து 80 கோடிகள் வரை சிவகார்த்திகேயன் உயர்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டும் இல்லாமல், தனது 25வது படமாக, சுதா கொங்கரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி, படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்தப் படம் ஏற்கெனவே சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி, அதன் பின்னர் விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆனபோது, இந்தப் படத்திற்கு ‘புறநானூறு’ என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நடிப்பதால், ‘புறநானூறு’ என்ற பெயரில் வெளியாகுமா அல்லது வேறு பெயரில் வெளியாகுமா என்ற கேள்வி மட்டும் உள்ளது. மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது என்கிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்