சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைப் பாராட்டியதோடு, பாதுகாப்பாகப் பணியாற்றவும் அவர்களுக்கு நினைவுபடுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘அமரன்’ திரைப்பட விளம்பரத்துக்காக, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் அவர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) சிங்கப்பூர் வந்தார். அவர் வந்ததும் நடந்த ஊடகச் சந்திப்பையும் மூன்று ரசிகர் சந்திப்புகளையும் JK சரவணாவின் தந்தரா குழுமம் ஒருங்கிணைத்தது.
குறிப்பாக, சிவகார்த்திகேயனைக் காணும் வாய்ப்பை வெளிநாட்டு ஊழியர்கள் பெற்றனர்.
சிவகார்த்திகேயனும் இயக்குநர் ராஜ்குமாரும் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்திற்கு மாலை 5 முதல் 6 மணி வரை வந்தனர். அச்சந்திப்பை வெளிநாட்டு ஊழியர் நிலையம், சிங்டெல், வெளிநாட்டு ஊழியர் உதவி நிதி (MWAF) இணைந்து ஏற்பாடு செய்தன.
தம்மைக் காணவந்த வெளிநாட்டு ஊழியர்களிடம் நகைச்சுவையாகவும் அன்பாகவும் பேசினார் சிவகார்த்திகேயன். அவருடன், ‘அமரன்’ திரைப்படம் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்தார் இயக்குநர் ராஜ்குமார்.
அதன் பின்பு, அமரன் குழுவினர் கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்துக்கும் சென்று வெளிநாட்டு ஊழியர்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
நடிகர்களுடன் சிறப்புச் சந்திப்பு
சிங்கப்பூர் வந்தடைந்ததும், மாலை 4 முதல் 4.30 மணி வரை ஜூரோங் ஈஸ்ட் கடைத்தொகுதியில் உள்ள ‘கேத்தே’ திரையரங்குகளில் ‘அமரன்’ குழுவினருடன் நடந்த சிறப்புச் சந்திப்பில் சுமார் 100 ரசிகர்கள் பங்கேற்றனர். அச்சந்திப்பை ‘ஹோம் ஸ்கிரீன் எண்டர்டெய்ன்மண்ட்’, ‘கேத்தே’ திரையரங்குகள் ஏற்பாடுசெய்தன.
சந்திப்புக்கான நுழைவுச்சீட்டுகள் $25க்கு ‘கேத்தே’ இணையத்தளத்தில் வெகு விரைவில் விற்றுத் தீர்ந்தன.
தொடர்புடைய செய்திகள்
எனினும், நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்களும் மனந்தளராமல், சிவகார்த்திகேயனைக் காண திரையரங்குக்கு வெளியே திரண்டனர். அவர் வந்ததும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூக்குரலிட்டு வரவேற்றனர்.
இயக்குநருடன் வந்த சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்து, கைகொடுத்து, புகைப்படங்கள் எடுத்தபடி நடந்தார்.
‘வடை போச்சே’ வலையொளியின் யுவராஜ், ஜவ்ஹார் இருவரும் நெறியாளர்களாக சிறப்புச் சந்திப்பை வழிநடத்தினர்.
“சிவகார்த்திகேயனுடன் எளிதாகப் பேச முடிந்தது. அவர் மிகவும் எதார்த்தமாகப் பழகுகிறார்,” என்றார் ஜவ்ஹார்.
“சிவகார்த்திகேயனைக் காண சிங்கப்பூர் முழு ஆதரவுடன் வந்திருந்தது,” எனப் பாராட்டினார் யுவராஜ்.
“அருமையான அனுபவம். ‘அமரன்’ வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்றார் ‘வடை போச்சே’ குழுவின் க.பாரத்.
இச்சந்திப்புக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கியவர்களுக்கு ‘அமரன்’ திரைப்படத்துக்கான பற்றுச்சீட்டும் கிடைத்தது.
சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷ் வராததால் ரசிகர்கள் வருத்தம்
சிங்கப்பூருக்கு முன்பு மலேசியாவில் நடந்த ரசிகர் சந்திப்புகளுக்கு சென்றிருந்த ‘அமரன்’ கதாநாயகி சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருவரும் சிங்கப்பூருக்கு வரவில்லை. அவர்களை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
‘அமரன்’ திரைப்பட இசை வெளியீடு குறித்த அலுவல்கள் காரணமாக சிங்கப்பூர் வரமுடியாததற்கு ரசிகர்களிடம் ஒரு காணொளியில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் ஜி.வி.பிரகாஷ்.
போர்வீரரை நினைவுகூரும் ‘அமரன்’
‘அமரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் எய்தி அசோக சக்கரம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வை மறு உயிர்ப்பிக்கிறார். இரும்புப் பெண்மணியாகக் கெளரவிக்கப்படும் மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ்ஸாக நடிக்கிறார் சாய் பல்லவி.