உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டம் வென்ற குகேஷை நேரில் சந்தித்து அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படங்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தற்காலிகமாக எஸ்.கே.23 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வஸந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வர உள்ளது.
இது தவிர சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள எஸ்.கே, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க, அதர்வாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டம் வென்ற குகேஷை நேரில் சந்தித்து அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, விலை மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார்.
குகேஷ் சிறு வயதில் இருந்தே சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகராம். இதை அறிந்த சிவகார்த்திகேயன் திடீரென அவரைச் சந்தித்துப் பரிசு கொடுத்து இருக்கிறார்.
முன்னதாக ‘கோட்’ படத்தில் சிறப்புக் காட்சியில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு விஜய் ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.