சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அமரன்’ படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராசி’ படத்தில் நடித்துள்ளார் இவர். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போது சிவகார்த்திகேயன் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், அட்லீ இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் சிவா நடிப்பதாகத் தெரிகிறது.
மறுபுறம், கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘2018’ படத்தை இயக்கிய ஜுட் ஆண்டனி, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுறது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக முன்னணி தமிழ் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’யிலும் கதாநாயகனாகக் கொடிகட்டிப் பறந்த ரவி மோகன் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. ரவி மோகன் வேறு யாருமில்லை, முன்பு ‘ஜெயம்’ ரவி என்ற பெயரில் ரசிகர்களைக் கவர்ந்தவர்தான்.
ஒரு காலத்தில் மேடை நகைச்சுவைக் கலைஞராக வயிறு குலுங்க சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் முதலில் நகைச்சுவை ஹீரோவாக வலம் வந்தார். இப்போது பல்வேறு கதாபாத்திரங்களில் கதாநாயகனாக ரசிகர்களின் மனத்தை கொள்ளைகொண்டு வருகிறார்.