இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’ திரைப்படத்தில் இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் அவர் தோன்றியிருப்பது ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது.
‘பராசக்தி’ திரைப்படம் சனிக்கிழமை (டிசம்பர் 10) உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல்நாள் திரையரங்குகளில் கூட்டம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்பொழுது அரங்கு நிறைந்த காட்சிகளுடன் உலகெங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
வணிக வட்டாரத் தகவல்களின்படி, ‘பராசக்தி’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 11.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இது சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘அமரன்’ செய்த 21 கோடி ரூபாய் சாதனையை முறியடிக்காவிட்டாலும் மிகச்சிறப்பான தொடக்கமாகவே கருதப்படுகிறது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளி வராதது ‘பராசக்தி’ படத்திற்கு சாதகமாக அமைந்தது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது
விஜய்யின் ‘லியோ’, ‘கோட்’ படங்கள் ஏற்படுத்திய அதிர்வலைகளைப் போலவே இப்படமும் திரையரங்குகளில் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது.
1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் நகர்கிறது.
ஓர் அமைதியான அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கும் சிவகார்த்திகேயன், சூழ்நிலைகளால் சமூகப் போராட்டத்தில் குதித்து, எழுச்சிமிக்க போராளியாக மாறும் பயணமே படத்தின் மையக்கரு.
படத்தில் நாயகன், வில்லன் இருவருமே சம பலத்தில் மோதுகின்றனர். போராட்டத்தை ஒடுக்கும் கொடூரமான காவல் அதிகாரியாக ரவி மோகன் நடித்துள்ளார்.
இதுவரை தனக்கிருந்த நாயகன் என்ற வேடத்தை உடைத்து வில்லனாக அவர் மிரட்டியிருப்பதும் சிவகார்த்திகேயனின் முதிர்ச்சியான நடிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
அதர்வா தனது கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிகை ஸ்ரீலீலா, தமிழில் தனது முதல் படத்திலேயே சொந்தக் குரலில் பேசி கவனம் ஈர்த்துள்ளார்.
இந்தியாவில் வெளியீடு கண்ட பதிப்பில் சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் தணிக்கைக் குழுவினர் வசனங்களை சத்தமில்லாமல் மாற்றியுள்ளனர்.
திரையரங்குகளில் அந்தக் காட்சிகள் வெளியாகும்போது சத்தமில்லாத இடங்களை ரசிகர்களே ஊகித்துத் திரையரங்குகளில் உற்சாகக் குரல் எழுப்புவது படத்தின் பலத்தைக் காட்டுகிறது.
மேலும், இது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் 100வது படம் என்பதால், பின்னணி இசையில் அவர் காட்டியுள்ள உழைப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அரசியல் கதையைச் விறுவிறுப்புக் குறையாமல் சுதா கொங்கரா இயக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
உருக்கமான காட்சிகள் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்துள்ள[Ϟ]தாலும் நேர்மறையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருவதாலும், வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

