சிவாஜி படத் தலைப்புகளை தனது படங்களுக்குச் சூட்டி சர்ச்சையைக் கிளப்பி வந்தார் தனுஷ். ‘திருவிளையாடல்’, ‘உத்தம புத்திரன்’ என அந்தப் பட்டியல் நீண்டது.
சிவாஜி ரசிகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்த காரணத்தால், தனுஷ் இப்போதெல்லாம் சிவாஜி படத் தலைப்புகளை வைப்பதில்லை. ஆனால், அவருக்குப் பதில் சிவகார்த்திகேயன் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற சிவாஜி கணேசன் நடிப்பில், கலைஞர் எழுதிய, ‘பராசக்தி’ படத்தை சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்குச் சூட்டியுள்ளனர்.
இது சிவாஜி ரசிகர்களைக் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது.
சிவாஜி மன்றத்திலும் சிவாஜி தமிழகத் தலைவராக பதவி வகித்த ஜனதா கட்சியிலும் சிவாஜிக்கு பக்கதுணையாக இருந்த கே.சந்திரசேகர் இந்த எச்சரிக்கையை சிவகார்த்திகேயனுக்கு விடுத்துள்ளார்.
படம் வெளியாகும் நாளில் ஏதேனும் பிரச்சினை வருமா என்பது தெரியவில்லை.
ஓடிடி தளங்களில் நடிகர் பிரபாஸ் நடித்த ‘கல்கி’, ‘சலார்’ படங்களைவிட, சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா’ நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அண்மையில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு ஓடிடி தளத்தில் நிறைய பார்வையாளர்களைப் பெற்றிருப்பதை தெலுங்கு திரையுலகத்தினர் கூடுதல் வியப்புடன் பார்க்கிறார்கள்.
கார்த்தி, சூர்யா வரிசையில் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு தேசத்திலும் வேரூன்றி வருகிறார் சிவகார்த்திகேயன்.
சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகி வருகிறது ‘பராசக்தி’.
இப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார் என்பதும் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரை, காரைக்குடி பகுதிகளில் நடைபெற்றதும் சிவாவின் தீவிர ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கசிந்த புகைப்படங்கள் மூலமாக இப்படத்தில் தற்போது மலையாள நடிகர் பேசில் ஜோசஃப் நடித்து வருவது தெரிய வந்திருக்கிறது.
இலங்கையில் நடக்கும் படப்பிடிப்பில் இவருடைய காட்சிகளும் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம்.
பேசில் ஜோசஃப் நடிப்பில் அண்மையில் ‘பிராவின்கூடு ஷாப்பு’, ‘பொன்மேன்’ ஆகிய மலையாளத் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இதில் ‘பொன்மேன்’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
பேசில் ஜோசஃப் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குநரிடம் முதலில் தெரிவித்தது சிவகார்த்திகேயன்தானாம். ஏற்கெனவே இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் அப்படியோர் எண்ணம் இருக்க, உடனடியாக கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ‘பராசக்தி’ குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ‘பராசக்தி’ படப்பிடிப்பு தொடர்பான காணொளிப் பதிவிலும் புகைப்படங்களிலும் இணையத்தில் வெளியாவதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
படப்பிடிப்புக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் காணொளிகள், புகைப்படங்கள் கசிவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இல்லையெனில் படம் குறித்த சுவாரசியம் ரசிகர்களிடம் குறைந்துவிடும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கை படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காணொளிகளின் மூலம் ஜெயம் ரவி கதாபாத்திரம் குறித்து பலருக்கும் தெரிய வந்துள்ளது.
ஏற்கெனவே சிதம்பரம் பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.