வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையும் படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும்.
ஆனால், சிவாவின் ரசிகர்களோ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிடுமாறு சமூக ஊடகங்கள்வழி நச்சரித்து வருகிறார்கள்.
குறிப்பாக, படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
அண்மையில் மலையாளத்தில் கல்யாணி நடிப்பில் வெளியான ‘லோகா’ படம் ரூ.300 கோடி வசூல்கண்டு பெரிய சாதனை புரிந்துள்ளது. இதனால் அவர் நடித்தால் பிற மொழிகளிலும் படத்தின் வியாபாரத்துக்கு உதவும் என்று இயக்குநரும் நாயகனும் கருதியுள்ளனர். தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் எனத் தகவல்.
ஏற்கெனவே வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார் கல்யாணி. சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார்.

