தனது வீட்டில் நாள்தோறும் சில விநோதமான சத்தங்கள் கேட்பதாகவும் அவை தமக்கு மோசமான அனுபவங்களைத் தருவதாகவும் கூறியுள்ளார் நடிகை தனுஸ்ரீ.
இதுகுறித்து இன்ஸ்டகிராம் தளத்தில் அழுது புலம்பியபடியே அவர் பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், தன் வீட்டுக்குள்ளேயே சில சத்தங்கள் கேட்பதாக அவர் மிரட்சியுடன் பேசுகிறார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளாக என் வீட்டுக்கு உள்ளே, வெளியே பலத்த சத்தம் எழுந்தபடி உள்ளது.
“ஆனால், யாரும் நான் சொல்வதை நம்புவதாக இல்லை. அதனால் புகார் சொல்வதையும் புலம்புவதையும் விட்டுவிட்டேன்.
“என் மனநிலையைப் பாதுகாக்க இந்து சமய மந்திரங்கள் கூடிய இசையை கேட்கிறேன்.
“ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து மன அழுத்தம், பதற்றத்தை எதிர்கொள்வதால் நாட்பட்ட சோர்வு நோய்க்கான அறிகுறிகள் உருவாகி உள்ளன,” என்று தனது காணொளியில் குறிப்பிட்டுள்ள தனுஸ்ரீ, தாம் அடிக்கடி கேட்கும் அந்தச் சத்தங்களையும் பகிர்ந்துள்ளார்.
தமிழில் விஷாலுடன் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்த தனுஸ்ரீ, அதன் பின்னர் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தி நடிகர் நானா படேகர் மீது அவர் அளித்த ‘மீடூ’ புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், விசாரணையின் முடிவில், தனுஸ்ரீயின் புகாரில் உண்மை இல்லை என மும்பை காவல்துறை கூறிவிட்டது.
இந்நிலையில், தாம் வெளியிட்ட காணொளியில், காவல்துறையைத் தாம் பலமுறை தொடர்புகொண்டதாக குறிப்பிட்டுள்ளார் தனுஸ்ரீ.
மேலும், “தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்கள். தாமதமாகும் முன் ஏதாவது செய்யுங்கள்,” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

