தமிழ்த் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட பாடலுக்குப் புகழ்பெற்ற கதாநாயகிகள் சிறப்பு நடனமாடுவது என்பது பல ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ள நடைமுறை.
அந்த வகையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அனிருத் இசையமைப்பில் நடிகை தமன்னா ஆடிய துள்ளலான நடனம், யூடியூப் தளத்தில் பாடல் வரிகளுடன் கூடிய காணொளியாக வெளியாகி, 250 மில்லியன் பார்வைகளையும் திரையில் இடம்பெற்ற பாடலின் பதிவு 400 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் கடந்து சாதனை படைத்தது.
தற்போது தயாராகி வரும் ‘ஜெயிலர்-2’ படத்திலும் அதே போன்ற ஒரு பிரம்மாண்டமான சிறப்பு நடனப் பாடலைப் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
‘அல்ல பொலேலோ’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை விளம்பரப்படுத்தும் வகையில், அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இம்முறை அந்தச் சிறப்புப் பாடலில் புகழ்பெற்ற நடிகை பூர்ணா நடனமாடியுள்ளார்.
பரதநாட்டியக் கலைஞரான பூர்ணா, தனது தனித்துவமான நடனத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
இருப்பினும், ‘காவாலா’ பாடலின் மூலம் தமன்னா ஏற்படுத்திய சமூக வலைத்தளத் தாக்கத்தை பூர்ணாவின் ‘அல்ல பொலேலோ’ பாடல் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஆனால், தம்மால் அதைச் சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார் பூர்ணா.


