தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலாய், தாய்லாந்து மொழிகளிலும் பாட வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன்: பாடகர் அந்தோணி தாசன்

2 mins read
185d220a-d7ce-4fd3-a2d7-72bdf9d8c5cc
(இடமிருந்து) பாடகர் அந்தோணி தாசன், ‘விடாமுயற்சி’ பட சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெறும் அஜித்தின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு இணையாகத் தானும் உற்சாகத்தில் மிதப்பதாகச் சொல்கிறார் பாடகர் அந்தோணி தாசன்.

‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெறும் ‘சவதீகா’ பாடல் அண்மையில் வெளியானது. அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

“இந்தப் பாடலைப் பாடும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் ஏற்கெனவே அனிருத் இசையில் ‘சொடக்கு மேல’, ‘டிப்பம் டப்பம்’ போன்ற பாடல்களைப் பாடியுள்ளேன்.

“அவருடன் இணைவதில் மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்தில் எல்லோருமே மூன்று ஆண்டுகள் முடங்கிப் போனோம். அந்த நேரத்துக்கும் சேர்த்து உழைக்க வேண்டும் என்ற மனபாரத்துடன் இருந்தபோதுதான் அனிருத் இந்த வாய்ப்பை வழங்கினார்.

“அவரை ஒரு கடவுள் போல பார்க்கிறேன். இந்தப் பாடல் 2025ஆம் ஆண்டில் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என நம்புகிறேன்,” என்று நெகிழ்கிறார் அந்தோணி தாசன்.

இவர் அஜித்தின் தீவிர ரசிகராம். ‘அஜித்துக்காக எப்போது பாடப் போகிறீர்கள்’ என்று ரசிகர்கள் பலரும் இவரைக் கேட்டுக்கொண்டே இருந்தார்களாம்.

“ஏற்கெனவே ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளேன். ஆனால், அது பிரபலமாகவில்லை. இப்போது அனிருத் தந்துள்ள பாடல் என் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக அமையும் என நம்புகிறேன்.

“பாடலைப் பாடி முடித்த பிறகுதான் அஜித்தான் இப்படத்தின் கதாநாயகன் என்பது தெரிய வந்தது. இப்பாடலை எழுதிய தம்பி அறிவு, அவர் நினைத்திருந்தால் அவரோ அனிருத்தோ பாடியிருக்கலாம். ஆனால், என்னைப் பாட வைத்துள்ளனர்.

“இருவருக்கும் நன்றி சொல்வதைத்தவிர என்னிடம் வேறு எதுவுமில்லை. ‘சவதீகா’ என்பதற்கு தாய்லாந்து மொழியில் ‘நல்வரவு’ என்று அர்த்தமாம். அதேபோல், இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘கப்கூன்கா’ என்றால் நன்றி என அர்த்தம்.

“தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடியிருக்கிறேன். அடுத்து மலாய், தாய்லாந்து மொழிகளிலும் பாட வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. அது தற்போது இந்தப் பாடல் மூலமாக ஓரளவு நிறைவேறியுள்ளது. எனினும் அந்த மொழிகளில் பாட விரும்புகிறேன்.

“இந்த மொழிகளைப் பேசும் நாடுகளுக்கு அவ்வப்போது சென்று வருவதால் இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் எனக்கு நன்கு தெரியும்.

“அந்த வார்த்தைகள் நம் தமிழ்ப் பாடலுக்கு உகந்தாற்போல் கச்சிதமாகப் பொருந்திப் போனதும் அனைவரையும் கேட்டவுடன் ஆட வைப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

“அனிருத் எப்போதும் ஒரு குழந்தை மாதிரிதான். எந்தவிதமான பகட்டும் பந்தாவும் இல்லாமல் பழகுவார். அவர் எனக்கு மீண்டும் அளித்துள்ள வாய்ப்புக்காக எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும் அது போதாது,” என்கிறார் பாடகர் அந்தோணி தாசன்.

குறிப்புச் சொற்கள்