மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் ‘மண்டாடி’.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் ‘மண்டாடி’ உருவாகி வருகிறது.
இப்படத்தில் சூரி, முத்துக்காளி என்ற மீனவனாக நடித்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தில் சத்யராஜ், மகிமா, அச்யுத் குமார், ரவீந்திர விஜய், சுகாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டுப் போட்டியை மையமாக வைத்து உருவாகிறது.
‘மண்டாடி’ படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களின் இயக்குநரான ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
நகைச்சுவை நடிகராகப் பெயர்பெற்ற சூரி, அண்மைக் காலமாக கதாநாயகனாகவும் வலம் வருவது மட்டுமின்றி விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை - 1’, ‘விடுதலை - 2’ மற்றும் ‘மாமன்’, ‘கொட்டுக்காளி’ போன்ற தரமான படங்களின் மூலம் தமது நடிப்புத் திறனால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் இவர்.
இதற்கு முன்பு ‘டான்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘அஞ்சான்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘களவாணி’ போன்ற படங்களின் மூலம் தமிழ்த்திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார் சூரி.
பல ஆண்டுகாலமாக சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி, ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்திலிருந்து புகழ்பெறத் தொடங்கினார். அப்படத்தில் சூரி இடம்பெற்ற 50 பரோட்டாக்களை உண்ணும் நகைச்சுவைக் காட்சி காலத்தால் அழியாத ஒன்றாக ஆனது.

