மதுரையைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான ராமலட்சுமணன், எளிமையான குடும்பத்தில் பிறந்து நடிகர் ரஜினிகாந்தின் படங்களைப் பார்த்தபடியே திரையுலகக் கனவுடன் வளர்ந்தவர்.
மணிரத்னம் இயக்கத்தில் 1991ல் வெளியான ‘தளபதி’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் ‘சூர்யா’ கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அதன்பிறகு, தம் பெயரைச் ‘சூரியா’ என அவர் மாற்றிக்கொண்டார்.
பின்னர் திரையுலகில் நுழைந்தபோது அப்பெயர் சுருக்கப்பட்டுச் ‘சூரி’ என மாறியதாகப் ‘பிகைண்ட்உட்ஸ்’ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார்.
தாம் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்றும் அந்த உத்வேகமே இன்றைய ‘சூரி’ உருவாகக் காரணம் என்றும் நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1993ல் தமது 16வது வயதில் திருப்பூரில் நாள்கூலித் தொழிலாளியாக வேலை செய்து, வாரச் சம்பளமாகப் பெற்ற 70 ரூபாயைக் குடும்பத்திற்கு அனுப்பி வைப்பது அவரது வழக்கம்.
வறுமையால் பல நேரங்களில் உணவின்றியும் தேநீர் மட்டுமே குடித்தும் சிரமங்களை எதிர்கொண்டவர் அவர்.
1996ல் சென்னைக்கு வந்து ‘கிளீனர்’, ‘பெயின்டர்’ போன்ற சிறுசிறு வேலைகளைச் செய்துகொண்டே படப்பிடிப்புத் தளங்களில் வாய்ப்புத் தேடினார்.
தொடக்கத்தில் பெயரற்ற சிறிய கதாபாத்திரங்களிலும் ‘மறுமலர்ச்சி’ போன்ற படங்களில் நகைச்சுவைக் காட்சிகளிலும் நடித்தார்.
2009ல் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டிக் காட்சி மூலம் ‘பரோட்டா சூரி’ எனப் புகழ்பெற்றார்.
அதைத் தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜில்லா’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார்.
2021ல் ரஜினிகாந்துடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்ததன் மூலம் தமது நீண்டநாள் கனவை நனவாக்கிக்கொண்டார்.
2023ல் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை பாகம் 1’ மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிப் பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது ‘விடுதலை பாகம் 2’, கடலை மையமாகக் கொண்ட ‘மண்டாடி’ போன்ற படங்களில் நடித்துத் தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத முன்னணி நாயகனாகச் சூரி உயர்ந்துள்ளார்.
புதிய படத்திற்கு ரூ.25 கோடி சம்பளம்
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராகப் பயணத்தைத் தொடங்கி தற்போது முன்னணிக் கதாநாயகனாக உயர்ந்துள்ள நடிகர் சூரி, புதிய படத்திற்கு ரூ.25 கோடி சம்பளம் பெறுகிறார்.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இந்த மாபெரும் தொகை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் வெற்றிகள், கதைகளைக் கவனமாகத் தேர்வு செய்யும் திறன் காரணமாகவே திரைப்படச் சந்தையில் அவரது மதிப்பு உயர்ந்துள்ளது.
அவர் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தடுத்த புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


