நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் அடுத்த படம் ‘மண்டாடி’.
வெற்றிமாறனிடம் உதவியாளராகப் பணியாற்றியவரும் ‘செல்ஃபி’ படத்தை இயக்கியவருமான மதிமாறன் ‘மண்டாடி’யை இயக்குகிறார்.
ராமநாதபுரம் கடற்பகுதியில் நடக்கும் பாய்மரப் படகுப் போட்டியைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகிறது இப்படம். இதன் பட்ஜெட் ரூ.75 கோடி எனப் படக்குழுவினர் கூறி வருவது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பு சூரி நடித்துள்ள ‘விடுதலை’, ‘கருடன், ‘மாமன்’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றாலும், ரூ.50 கோடிக்கு மேல் வசூல் பெற்றதில்லை. ஆனால், இப்புதிய படத்தை ரூ.75 கோடி செலவில் எடுப்பதுதான் பலரது வியப்புக்குக் காரணம். சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களைத் தயாரித்த எல்ரெட் குமார்தான் ‘மண்டாடி’ படத்தைத் தயாரிக்கிறார்.
பட வேலைகளைத் தொடங்கியபோது இவ்வளவு செலவாகும் என எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் படகுப்போட்டி, சண்டைக் காட்சிகள், கூடுதலாகத் தேவைப்பட்ட துணை நடிகர்கள் எனச் செலவு அதிகமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வளவு பெரிய செலவில் உருவாகும் படம், அதற்கும் மேல் வசூல் கண்டால்தான் படம் தப்பிப்பிழைக்கும். எனவே சூரி உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
அடுத்த சில மாதங்களில் ‘மண்டாடி’ வெளியீடு காணும் என்றும் அதன்பிறகே சூரி நாயகனாக நடிக்கும் மற்ற படங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
‘மண்டாடி’ படத்தின் வெற்றியில்தான் திரையுலகில் தம்மால் வெற்றி நாயகனாக நீடிக்க முடியும் என்பதை சூரியும் உணர்ந்துள்ளார்.

