தனது பிறந்தநாளை ரசிகர்களைச் சந்தித்தும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் உற்சாகத்துடன் கழித்துள்ளார் இளையராஜா.
இந்நிலையில், மார்பகப் புற்றுநோயுடன் போராடிய அவரது தீவிர ரசிகைகளில் ஒருவரான சீதாலட்சுமி, அண்மையில் இளையராஜாவைச் சந்தித்தது தொடர்பான நெகிழ்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
சீதாலட்சுமிக்கு அறுவை சிகிச்சையின்போது அளிக்கும் வழக்கமான மயக்க மருந்தை அவரது உடல்நிலை ஏற்கும் நிலையில் இல்லை.
வேறு வகையில் ‘அனஸ்தீசியா’ செலுத்தப்பட்டு, அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. அப்போது ஆழ்ந்த மயக்க நிலையில் இருந்த சீதாலட்சுமி, திடீரெனப் பாடத் தொடங்கியுள்ளார். மருத்துவர்களுக்கு வியப்பு.
சீதாலட்சுமியோ, தனது பாடலைத் தொடர அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஏற்றவாறு மேம்பட்டதாம். அதன் பிறகு அவர் தொடர்ந்து பல பாடல்களைப் பாட, அறுவை சிகிச்சையும் முடிந்தது.
சிகிச்சையினூடே சீதாலட்சுமி பாடிய அனைத்துமே இளையராஜாவின் பாடல்கள்தான்.
அந்த மாய அனுபவம் அவருக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒருவித மன அமைதியைத் தந்தது.
சீதாலட்சுமி பயிற்சி பெற்ற பாடகி என்பது உபரித் தகவல்.
தொடர்புடைய செய்திகள்
“இளையராஜாவைப் பிடிக்குமா?” என்று கேட்க, “ஆமாம், அவரை யாருக்குத்தான் பிடிக்காது? அவர் ஒரு மேதை,” என்று கூறினாராம் சீதாலட்சுமி.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் இது குறித்துத்தான் அதிகம் பேசினர்.
சில நாள்களுக்குப் பின்னர், அப்போலோ மருத்துவமனையின் தகவல் தொடர்புக் குழு இளையராஜாவைச் சந்திக்க அனுமதி கோரியது.
ஏனெனில், இளையராஜாவை நேரில் சந்தித்தால் சீதாலட்சுமி மகிழ்ச்சி அடைவார் என்பதும் விரைவில் குணமடைவார் என்பதும் மருத்துவர்களின் நம்பிக்கையாக இருந்தது. அந்தச் சந்திப்பும் நடந்தது.
தன் ஆழ்மனதில் யாரை இசை மேதையாக நினைத்து ஆத்ம நிம்மதி பெற்று வந்தாரோ, அவரை நேரில் சந்தித்தது மறக்க முடியாத தருணம் என்று கூறியுள்ளார் சீதாலட்சுமி என இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி விகடன் இணையத்தளம் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
பெரும்பாலானோர் அவரது இசைக்கு பெரும் சக்தி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

