ரஜினி நடிக்கும் கூலி படத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகர்கள் இணைந்திருக்கிறார்கள்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ரஜினியின் 171வது படமான ‘கூலி’ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
‘மாநகரம்’ திரைப்படத்திற்குப் பிறகு திரைக்கதை பணிகளுக்காகத் தனது இணை இயக்குநர் சந்துரு அன்பழகனுடன் இணைந்திருக்கிறார் லோகேஷ். ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதனைத் தாண்டி தனது வழக்கமான தொழில்நுட்பக் குழுவுடன் கைகோத்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி இதற்கு முன்னர் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கிய அந்தப் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
அப்படி ஒரு பிரமாண்டமான வெற்றிக்கும் வசூலுக்குமான காரணங்களில் ஒன்று, பல மொழியில் உள்ள திறமையான முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்ததும்தான் என்பதால், இப்போது தயாரித்து வரும் ‘கூலி’ படத்திலும் பல மொழிகளில் இருந்து நடிகர்கள் இணைந்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் மலையாள நடிகர் செளபின் சாஹிர். இதையும் தாண்டி தெலுங்கிலிருந்து நடிகர் நாகார்ஜூனா நடிக்கவிருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அவரின் பிறந்தநாளை சிறப்பாக்க இந்தச் செய்தியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
1991ஆம் ஆண்டு கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது ‘சாந்தி கிராந்தி’ என்ற திரைப்படம்.
தமிழில் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற தலைப்பில் ரஜினி நடித்திருந்தார். தெலுங்கில் அந்தப் படத்தில் நாகார்ஜூனா நடித்திருந்தார். ஆனால், இப்போதுதான் முதல் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதுமட்டுமின்றி தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்திலும் நாகார்ஜூனா நடித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
‘கூலி’ பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவதால் மலையாளத்திலிருந்து செளபின் சாஹிர், தெலுங்கிலிருந்து நாகார்ஜூனாவுடன் கன்னடத்திலிருந்து நடிகர் உபேந்திராவும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‘ஜெயிலர்’, ‘லியோ’ படங்களில் ஜாக்கி ஷெராஃப் நடித்தது போல, இதிலும் பாலிவுட் வில்லன் ஒருவர் இணைவார் என்றும் அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
விசாகப்பட்டின படப்பிடிப்பில் சத்யராஜ், ஷ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் ஆகியோர் கலந்துகொண்டு வருகின்றனர். தொடர்ந்து 8 வாரங்களுக்கு மேல் அங்கே படப்பிடிப்பு தொடரும் என்று கூறப்படுகிறது. படத்தைக் கோடை கொண்டாட்டமாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.