தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஆண்களுக்காக மட்டுமே அதிக படங்கள் உருவாக்கப்படுவதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
மேலும், அத்திரைப்படங்களில் பெண்களின் கதாபாத்திரம் முழுமை அடைந்ததாக இருக்காது என்றும் நடிகைகளை நடனமாடவும் ஆண்களை புகழவும்தான் பயன்படுத்துவார்கள் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்துக்குப் பின் திரையுலகை விட்டு விலகி இருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
தற்போது அவர் இந்தியில் நடித்துள்ள ‘டப்பா கார்ட்டெல்’ என்ற இணையத்தொடர் வெளியாகி உள்ளது. இத்தொடர் குறித்தும் தென்னிந்திய திரையுலகம் குறித்தும் ஒரு பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.
“நான் பல தருணங்களில் ‘முடியாது’ என்று சொல்லியிருக்கிறேன். நான் நடிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து தென்னிந்திய நடிகர்களுடனும் நடித்த பிறகு, ஏறக்குறைய 28 வயதிற்குப் பின், சில படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடித்தேன். அச்சமயம் அது எனக்கு மிகக் கடினமான முடிவாக இருந்தது.
“தற்போது தென்னிந்திய சினிமாவில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. இந்தித் திரையுலகிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
“நான் என்னுடைய பாதையைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தேன். அதுதான் என்னை இப்போது இருக்கும் பாதையில் இயக்கிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
“அதுதான் நான் இப்போது யாராக இருக்கிறேனோ அதுவாக என்னை உருவாக்கி உள்ளது,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஜோதிகா.