‘அட.. வித்தியாசமான கதைகளில், கதாபாத்திரங்களில் நடிக்கிறாரே?’ என்று கூறும் அளவுக்கு ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைக்கிறார் கவின்.
தற்போது ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்தடுத்து கதைகள் கேட்டு வருகிறார்.
கதைகளை முடிவு செய்வதில் யாராவது வழிகாட்டுகிறார்களா என்று கேட்டால், ‘ஏன்.. எனக்கு என்ன தேவை, எது பொருந்தும் என்பது எனக்குத் தெரியாதா?’ என்று சிரித்தபடி பதில் கேள்வி எழுப்புகிறார் கவின்.
கதைத் தேர்வு குறித்துப் பேச பெரிதாக ஒன்றுமில்லை என்கிறார். ஒரு படத்துக்கும் அடுத்து நடிக்கும் படத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லாமல் பார்த்துக் கொள்வாராம். அது மிக முக்கியம் என்கிறார்.
மேலும், பல படங்களை ஒரே சமயத்தில் ஏற்காமல், நிதானமாகச் செயல்படுவதாகவும் சொல்கிறார். தேடி வரும் கதைகளில் தனக்கு ஏற்ற, பிடித்தமான கதைகளைக் கண்டுபிடித்து, அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ள கவின், இந்தப் படத்துக்காக முதன்முறை ஆண்ட்ரியாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
‘மாஸ்க்’ படப்பூசையின் போதுதான் ஆண்ட்ரியாவைச் சந்தித்தாராம்.
“அவருடைய (ஆண்ட்ரியா) நடிப்பே வித்தியாசமாக இருக்கும். ஒரு கூர்மையான, மென்மையான பார்வை, சில முகபாவங்கள் மூலம் சொல்ல நினைத்ததை திரையில் அழகாக வெளிப்படுத்தக்கூடிய திறமையான நடிகை. ‘வடசென்னை’ படத்தில் அவரது நடிப்பை மறக்கவே முடியாது. அதேபோல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அருமையான கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார்.
“பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் முகமூடி ‘மாஸ்க்’ படத்தின் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக ஏதாவது சிறப்புக் காரணம் உள்ளதா எனப் பலரும் கேட்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“அந்த முகமூடி கதையின் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது. நாயகன் தனக்கென சில கொள்கைக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார். அவனுக்கென சில விதிமுறைகள் இருக்கும்.
“அப்படிப்பட்ட ஒருவர், வேறு மாதிரியான சூழலுக்குள் எப்படி வருகிறார், அதனால் என்னவெல்லாம் ஏற்படுகிறது என்கிற கோணத்தில் கதை நகரும்,” என்கிறார் கவின்.
இது அதிரடிப் படம் இல்லையாம். குறிப்பிட்ட ஒருவகை படம் என்றும் சொல்லிவிட இயலாது என்று கவின் தரப்பில் சொல்லப்படுகிறது.
எனினும், ஒரு வணிகப்படத்துக்கான பல்வேறு அம்சங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களுடன் இப்படத்தின் கதையைப் பொருத்திக்கொள்ள முடியும் அளவுக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் இருக்கும் என்றும் சொல்கிறார் இயக்குநர்.
‘மாஸ்க்’ படத் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் பங்களிப்பு இருப்பது குறித்து கவினுக்கு முன்பே தெரியாதாம்.
“அவ்வளவு பெரிய இயக்குநர் அவர். ஆனால் மிக எளிய மனிதராக இருக்கிறார். கல்லூரியில் படித்தபோது என் புகைப்படங்களை அவரது அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. இந்தப் படத்தில் எனது பங்களிப்பு அவருக்கு மனநிறைவு கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.
“அவரைப் போன்ற சாதனை இயக்குநருடன் உட்கார்ந்து பேசுவதே பெரிய விஷயம். முக்கியமான காட்சிகளைப் படமாக்கும்போது அவரும் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஒரு காட்சியை எப்படி மெருகேற்றலாம் என்பது குறித்து அவருடன் இயக்குநரும் நானும் கலந்து பேசுவோம்.
“வெற்றிமாறனின் அனுபவம், அவரது வாசிப்பு ஆர்வம், அவருடைய தெளிவு எல்லாம் ஒன்று சேரும்போது, புதிதாக ஒரு விஷயம் கிடைக்கும். அது நல்ல யோசனையாகவும் அமையக்கூடும். ‘மாஸ்க்’ படத்தில் அப்படிப் பல காட்சிகளைக் குறிப்பிட இயலும்,” என்று அண்மைய ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார் கவின்.

