தமிழ்த் திரை உலகின் மாபெரும் நட்சத்திரங்களான ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அறிமுகக் காணொளி சனிக்கிழமை (பிப்ரவரி 21) பிற்பகல் வெளியானது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அறிமுகக் காணொளியில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் உள்ளனர்.
நெல்சனின் முந்தைய படங்களின் அறிமுகக் காணொளி போலவே, இப்படத்தின் காணொளியிலும் நகைச்சுவை கலந்த அதிரடிக் காட்சிகள் இருந்தன.
ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார்.
அதன் பின்னர், அவர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்தே ரஜினி-கமல் இணையும் படத்தின் பணிகளை நெல்சன் தொடங்கவுள்ளார்.
படத்தின் அறிமுகக் காணொளி தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கான நுழைவுச்சீட்டு முன்பதிவுகள் தொடங்கிய சில மணித்துளிகளில் விற்றுத் தீர்ந்தன.
தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் அந்தமான் உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு திரையரங்குகளில் அறிமுகக் காணொளி திரையிடப்பட்டது.
அறிமுகக் காணொளிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஊடகத்தில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்சனின் படங்களில் நடிக்கும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ‘விடிவி’ கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படத்திற்குத் தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

