தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைத்துறையில் இறுதிப்படி, அரசியலில் முதற்படி

3 mins read
f99979d0-9cfc-47a0-ba98-edb78ef28c1e
விஜய்யின் 69வது படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். - படம்: ஊடகம்

தன்னுடைய இறுதிப் படமான ‘தளபதி 69’ படத்தின் பூஜையுடன் அரசியலின் முதல் மாநாட்டிற்கான பூஜையையும் ஒரே நாளில் செய்து அசத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 69’ படத்தின் பட பூஜை நேற்று முன்தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இது விஜய்யின் 69வது படமாகும். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவிருப்பதால், ‘தளபதி 69’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘The Torch bearer of Democracy is arriving’ என்ற வரிகளுடன் சுவரொட்டி வெளியிட்டு இருக்கிறார்கள். உடன் அவரது ரசிகர்கள் ஜனநாயகத்திற்கான தீப்பந்தத்தை ஏற்றுவதற்கான கதை இது என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.

விஜய்யின் அரசியல் பாதைக்கு வித்திடும் படம் இது என்றும் தீப்பந்தத்தை ஏந்தி அரசியல் தீப்பொறியைக் கிளப்பும் படமாக இருக்கும் என்றும் பேச்சுகள் கிளம்பின. ஆனால், இயக்குநர் வினோத், “இது அனைவருக்கும் பிடிக்கக்கூடிய விஜய் படமாக இருக்கும்,” என ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.

அதற்கேற்றாற்போல் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியா மணி, மோனிஷா பிளஸ்சி என பல நடிகைகள் ஒன்றாக இணைந்துள்ளனர்.

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் மேனன் என கம்பீர வில்லன் கூட்டணியும் இருக்கிறது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை, அனல் அரசுவின் சண்டை என புதுக் குழுவுடன் கைகோத்துள்ளார் வினோத்.

முன்னதாக கடந்த மாதத்தில் இருந்தே கலை இயக்குநர் செல்வகுமார் கைவண்ணத்தில் பாடல் காட்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் ஒன்றை அமைத்து வந்தனர். திட்டமிட்டபடி அரங்கம் தயாராகவே, படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளனர்.

விஜய், பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடனமாடும் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. பாடல் படப்பிடிப்பு தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் என்றும் அதன்பின் பாபி தியோல் பங்கேற்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

படபூஜை நடந்த அதே நாளில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு பந்தல் கால் நடும் பூஜை நடத்தப்பட்டிருக்கிறது.

அதாவது விஜய்யின் மக்கள் இயக்க உறுப்பினர்கள், தொண்டர்கள் மாநாட்டிலும் சினிமா ரசிகர்களின் கவனம் படப் பூஜையிலுமாக இருக்கட்டும் என நினைத்திருக்கிறார் விஜய்.

முதல் பாடலின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மாநாட்டு வேலைகளில் கவனம் செலுத்த இருக்கிறார் விஜய். மாநாடு முடிந்த பின்னரே, மீண்டும் ‘தளபதி 69’க்கு வருவார் என்கின்றனர் படக்குழுவினர்.

நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றும் பெரியார் வழியை பின்பற்றுகிறார் என்றும் பஞ்சாயத்துக்கள் வெடித்து வந்த நிலையில், பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் வளர்த்து புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் பூமி பூஜை நடைபெற்றது.

வரும் அக்டோபர் 27ஆம் தேதி அங்குதான் பிரமாண்டமாக விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் நடிகர் விஜய்யின் சினிமா பயணம் அஸ்தமனமாகவுள்ள கடைசிப் படத்துக்கான படப்பிடிப்பும் உதயமாகவுள்ள அரசியல் மாநாட்டுக்கான பணிகளையும் விஜய் மேற்கொண்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கருத்துக்களை இணையத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த ஓராண்டில் நடிகர் விஜய் அரசியலில் களம் கண்டு நிறைய வேலைகளில் நேரடியாக ஈடுபட வேண்டும். அதேபோல அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தளபதி 69 படத்தை வெளியிட வேண்டிய நிலையில், அதற்கான படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இரண்டிலுமே விஜய் சிக்சர் அடிக்க சரியான திட்டத்துடனே களமிறங்கியுள்ளார் என்றும் கோட் விஜய்க்கு வெற்றி நிச்சயம் என்றும் அவரின் ரசிகர்கள் ‘#Thalapathy69Pooja’ ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாவிஜய்