துறவு என்பது உலகப்பற்றைத் துறத்தல். அறம் என்பது அந்த துறவுக்குச் செய்கிற நேர்மை. அதனால்தான் ‘துறவறம்’ எனப்படுகிறது.
துறவு மேற்கொள்ளுதல் என்பது வீட்டை விட்டு வெளியேறி, கோவிலே கதி என்று இருப்பது மட்டுமல்ல. ‘லௌகீகம்’ எனப்படும் இல்லற வாழ்க்கையில் இருந்துகொண்டே ஆன்மிக நெறிகளைக் கடைப்பிடிப்பதும் துறவறம்தான்.
பக்தி என்பது, தான் நம்பும் இறைவனைத் தேடி கோவில்களுக்குச் சென்று, கிடைத்த வாழ்க்கையை அல்லது மேலான வாழ்க்கையை வேண்டுவது.
ஆயிரம் வசதிகள் இருந்தும் அவற்றை விட்டுவிட்டு, துறவு பூண்டு, இல்லறத்தில் இருந்துகொண்டே இறைவனை வழிபடும் திரையுலகத்தினர் அன்று முதல் இன்று வரை பலர் உண்டு. அவர்களில் சிலரைப் பார்ப்போம்.
‘காதலிக்க நேரமில்லை’ காஞ்சனா
பெங்களூரைச் சேர்ந்த வசுந்தரா தேவி விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். ஒருமுறை இயக்குநர் ஸ்ரீதர் சென்ற விமானத்தில் வசுந்தராவுக்குப் பணி.
நவநாகரிகமாக இருந்த அந்தப் பெண்ணைச் சம்மதிக்க வைத்து, காஞ்சனா எனப் பெயரை மாற்றி , ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என அன்றைய முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து , 1970களில் புகழ்பெற்ற நாயகியாகத் திகழ்ந்தார் காஞ்சனா.
நிற்க நேரமில்லாமல் ஓடிஓடி சம்பாதித்த காஞ்சனாவின் சொத்துகளை அபகரித்து சில உறவினர்கள் மோசடி செய்தனர். இதைத் தாமதமாக தெரிந்துகொண்ட காஞ்சனா, தன் சம்பாத்திய கணக்குகளை தன் நேரடிப் பார்வையின்கீழ் கொண்டு வந்தார்.
சென்னை தி.நகரில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை விலைக்கு வாங்கினார். இந்த சொத்திலும் பங்கு கேட்டு உறவினர்கள் வழக்குத் தொடர, பல ஆண்டுகள் வழக்கு விசாரணை நீண்டு, சுமார் பத்தாண்டுகளுக்கு முன் காஞ்சனா பக்கம் தீர்ப்பானது.
அந்த மண்டபம் மற்றும் அந்த இடத்தின் மதிப்பு பத்தாண்டுகளுக்கு முன்பு 80 கோடி ரூபாய். அவ்வளவு மதிப்பான அந்த மண்டபத்தை தனது இஷ்ட தெய்வமான திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்துக்கு எழுதி வைத்துவிட்டார்.
இப்போது பெங்களூரில் தன் தங்கையின் பாதுகாப்பில் இருக்கும் காஞ்சனா, காவி நிற சேலை அணிந்து ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கோவிலில் ஆன்மிகச் சிரத்தையுடன் செலவிடுகிறார்.
‘பாய்ஸ்’ புவனேஸ்வரி
‘பூனைக்கண்’ புவனேஸ்வரி என்றுதான் சொல்வார்கள். சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த பிறகு ‘பாய்ஸ்’ புவனேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கைதாகி வழக்கைச் சந்தித்த புவனேஸ்வரி, அக்குற்றம் நிரூபிக்கப்படாதவர் என விடுதலையானார். ஆயினும், வாழ்க்கை என்பது பெரும் போராட்டமாகவே இருந்தது.
“ஒரு நாள் திடீரென என் மனதுக்குள் ஒரு மாற்றம். அன்றிலிருந்து என் பாதை ஆன்மிகமானது. என் கடைசி மூச்சு வரை இறைப்பணிக்காக என வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன். ஆனாலும் இந்தச் சமூகம் என்னைத் தவறாகவே பார்க்கிறது. அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை.
“நான் காசிக்குச் சென்று சித்தி பெற்று வந்திருக்கிறேன். தினமும் கோவில்களுக்குச் செல்கிறேன். என் வீட்டை படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டிருப்பதால், அதில் கிடைக்கும் வாடகைத் தொகையை வைத்து அன்றாப்ட பூசை, ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறேன்,” என்று விளக்கம் அளிக்கும் புவனேஸ்வரி, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளைத்தான் பெரும்பாலும் அணிகிறார்.
‘நாடோடித் தென்றல்’ ரஞ்சிதா
நித்தியானந்தா சாமியாரின் தலைமை பெண் சீடர் ரஞ்சிதா. அவரது ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பாளர் என்பது பரவலாக அறியப்பட்ட தகவல்தான்.
நித்தியானந்தாவின் 31வது பிறந்தநாளில் அவரிடம் முறைப்படி தீட்சை பெற்று சந்நியாசி ஆனார் ரஞ்சிதா. அதனால் ரஞ்சிதாவின் பெயர் ‘மா நித்ய ஆனந்தமயி’ என மாற்றப்பட்டது.
‘காதல்‘ சரண்யா
திருத்தணி முருகன் கோவிலில் மொட்டையடித்து, கன்னத்தில் அலகு எனப்படும் வேலால் குத்திக்கொண்டு, பால்குடம் எடுத்தார் ‘சரண்யா நாக்’ எனப்படும் ‘காதல்’ சரண்யா.
சிறு வயதிலிருந்தே வடபழனி முருகன் மீது பற்றுகொண்ட சரண்யா, தனது ஆன்மிக குருவாக பரஞ்சோதி பாபா என்பவரை ஏற்றுள்ளார்.
“சுமார் ஐந்து வருடங்களாக திருத்தணி முருகனை தரிசிக்கச் செல்கிறேன். என் கூடவே இரு முருகா என முருகனை வேண்டிக்கொள்கிறேன். நாள்தோறும் எல்லாப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் வலிமை, முருகன் மீதுள்ள பற்றால் எனக்குக் கிடைத்துள்ளது,” என்கிறார் சரண்யா.
‘மைனா’அமலாபால்
‘மைனா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மீண்டும் நடிக்கக் கிளம்பிய அமலாவை, கணவர் வீட்டார் தடுத்ததால் விவாகரத்து ஆனது.
பஞ்சாப் பாடகரான ஒரு சிங்கை திருமணம் செய்ய திட்டமிட்டார். பாடகரோ அமலாவிடம் பண மோசடி செய்துவிட்டார். பிறகு தொழிலதிபர் ஜகத் தேசாயுடன் குடும்பம் நடத்தி, ஒரு குழந்தைக்குத் தாயானார். இதிலும் நிம்மதி இல்லை.
இதனால் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம், பாலி தீவு பௌத்த குகை ஆசிரமம் என அடிக்கடி நிம்மதி தேடி ஆன்மிகச் சுற்றுலா கிளம்பிவிடுகிறார்.
அண்மையில் பழனி முருகனையும் தரிசித்துவிட்டு வந்தார். சினிமா வாய்ப்புகளையும் ஏற்பதில்லை அமலாபால்.
‘கல்லூரி’ தமன்னா
தன் பேச்சை மீறி தட்சனின் (சிவனின் மாமனார்) யாகத்திற்குச் சென்று வந்ததால் ஆத்திரமான சிவன், வாளால் சக்தியை வெட்டி வீச, சக்தியின் உடல் பாகங்கள் இந்தியாவின் 51 இடங்களில் விழுந்தது. அதுதான் 51 சக்தி பீடங்கள் என்கிறது புராணம்.
அதில், சக்தியின் பிறப்புறுப்பு விழுந்த இடம்தான் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ‘காமாக்யனி’ கோயில். இங்கு சென்றால் சிறந்த மண வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
அண்மைக்காலமாக பல்வேறு கோவில்களுக்கு யாத்திரை சென்று வரும் தமன்னா, தன் குடும்பத்துடன் காமாக்யனி கோவிலுக்கும் சென்று தரிசித்து வந்திருக்கிறார். இது குடும்ப, திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கான ஆன்மிக ஈடுபாடாம்.
‘பாணா காத்தாடி’ சமந்தா
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ள சென்னைப் பெண் சமந்தா, தெலுங்கு நாயகன் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமந்தாவுக்கு தசைச் சிதைவு நோய் ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்தனர்.
மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் நலமடைந்த சமந்தா, அடிக்கடி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்.
அண்மையில்கூட பழனி முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வந்தார். தீவிர ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும்கூட லௌகீக வாழ்க்கை எனும் பொருளீட்டும் வாழ்கையைத் தீவிரமாக மேற்கொள்கிறார்.
தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவச் சேவைகள் செய்யவே இந்த வருமானத்தை அவர் செலவிடுகிறார்.
‘வருத்தப்படாத வாலிபர்’ சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தீவிர முருக பக்தர். தனது பெயருக்கு ஏற்ப, அறுபடை நாயகனாக முருகனை திருச்செந்தூரில் இருந்து தரிசிக்க ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து திருத்தணி முருகனைச் சென்று வணங்கினார். அதன் பின் பழனி சென்றார்.
‘அறுபடை முருகனையும் ஆசை தீர தரிசிக்க வேண்டும்’ எனும் தன் ஆசையை அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
யோகி பாபுவுக்கு யோகம் தரும் முருகன்
யோகி பாபு தொடர்ச்சியாக முருகன் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். யோகி அதிகமாக சென்று தரிசித்து வருவது திருத்தணி முருகன் கோவில்.
சினிமா வாய்ப்புகளுக்கு காத்திருந்த காலத்தில் திருத்தணி சென்று முருகனை தரிசித்துவிட்டு அங்கேயே இரவு படுத்திருப்பாராம்.
ஒருமுறை ‘காதல்’ சரண்யாவிடம் தற்செயலாக இதை யோகி பாபு சொன்னபோது, அதைக் கேட்டு வியந்த சரண்யா, அதன் பின்னர் திருத்தணி முருகனின் அதி தீவிர பக்தையானார்.
வீடுகட்ட நினைப்பவர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்ததும், ஒரு சிறு கல்லை எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டு வருவார்கள். யோகி பங்களா கட்டப் போகிறாரோ என்னவோ? சிறுவாபுரி முருகனை தரிசித்துவிட்டு வந்திருக்கிறார்.
‘விடுதலை’ சூரி
சூரி, முருகனின் தீவிர பக்தர். அண்மையில் திருச்செந்தூர் முருகனைத் தரிசித்துவிட்டு வந்தார்.
நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார். இனி அவர், மாய் மம்தா நந்த் கிரி என்ற பெயரில் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நட்சத்திரங்கள் பெரும்பாலும் வணங்கும் தெய்வம் தமிழ்க் கடவுளான சேயோன் குமரன்தான்.