தெலுங்குத் திரையுலகில் தனது அழகாலும் நடிப்பாலும் நடனத்தாலும் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளைகொண்டுவரும் ஸ்ரீலீலா கல்வியிலும் அசத்திவருகிறார்.
நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு மருத்துவப் பட்டக் கல்வியை மேற்கொண்டார். அவர் நடித்துள்ள ‘ராபின்ஹூட்’ படம் வெளிவரவிருக்கும் வேளையில் ஸ்ரீலீலா ‘எம்பிபிஎஸ்’ கல்வியை முடித்திருக்கிறார்.
‘ராபின்ஹூட்’, ஸ்ரீலீலா மறுபடியும் திரையுலகுக்குள் நுழையும் தருணமாகவும் விளங்குகிறது.
‘ராபின்ஹூட்’ படத்தில் ஸ்ரீலீலா, நித்தினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இருவரும் ஏற்கெனவே ‘எக்ஸ்டிராடினரி’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
‘ராபின்ஹூட்’ படத்தில், வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பும் நீரா வாசுதேவ் எனும் பெண்ணாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா.
இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தில் முதலில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருந்ததாக டைம்ஸ்நவ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ராஷ்மிகா, ‘புஷ்பா 2’ படத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரால் ‘ராபின்ஹூட்’டில் நடிக்க முடியவில்லை.
ஸ்ரீலீலா, தமிழிலும் விரைவில் அறிமுகமாகவிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் ‘பராசக்தி’யில் நடித்துள்ளனர்.

