தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா’

2 mins read
a974d556-bde6-4adb-b492-9fb38a4eb2be
‘குண்டூர் காரம்’ படத்தில் ஸ்ரீலீலா. - காணொளிப் படம்: ஆதித்யா மியூசிக் / யூடியூப்

தெலுங்குத் திரையுலகில் தனது நடிப்பாலும் விறுவிறுப்பான, துடிப்பான நடனத்தாலும் ரசிகர்களின் மனத்தைத் திருடிக்கொண்டுள்ள ஸ்ரீலீலா, இப்போது தமிழ் ரசிகர்களின் இதயங்களையும் கடத்திச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘குண்டூர் காரம்’, ‘ஆதி கேசவா’, ‘பகவந்த் கேசரி’ உட்பட பல பிரபலமான தெலுங்கப் படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீலீலா, சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகப்போவதாக செய்தி வந்துள்ளது. இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

‘இறுதிச் சுற்று’, ‘சூரரைப் போற்று’ ஆகிய தரமான கதைகளைக் கொண்டுள்ள வெற்றிப் படங்களை இயக்கிய சுதா கொங்கரா, மறுபடியும் சூர்யாவைக் கதாநாயகனாக வைத்து ‘புறநானூறு’ படத்தை இயக்கவிருந்தார். ‘சூரரைப் போற்று’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சூர்யா அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

எனினும், பல்வேறு காரணங்களால் சூர்யா ‘புறநானூறு’ படத்திலிருந்து விலகிக்கொண்டார். அவருக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

கடைசியாக மகே‌ஷ் பாபுவுடன் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடித்த ஸ்ரீலீலாவின் படங்கள் ஏதும் கடந்த எட்டு மாதங்களாக வெளிவரவில்லை. எனினும், பல்வேறு படங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலீலா, ‘மிட்டி’ எனும் பாலிவுட் படத்தில் நடிக்கப்போவதாக பல ஊடகங்கள் அண்மையில் குறிப்பிட்டன. அதனையடுத்து இப்போது இவர் தமிழிலும் களமிறங்கப்போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

எனினும், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடிக்கும் ‘குட், பேட் அக்லி’ படத்தில் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், அதுகுறித்தும் அதிகாரபூர்வ அறிவுப்பு எதுவும் இடம்பெறவில்லை.

இதற்கிடையே, ‘புறநானூறு’ படத்தின் கதாநாயகனான சிவகார்த்திகேயன்தான் தனது அடுத்த படத்தின் கதாநாயகன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார்.

விரைவில் வெளிவரவுள்ள ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன்.
விரைவில் வெளிவரவுள்ள ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன். - காணொளிப் படம்: சரிகம தமிழ் / யூடியூப்

விரைவில் வெளிவரவுள்ள ‘தளபதி’ விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு, அண்மையில் அதன் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்தான் தனது அடுத்த ‘ஹீரோ’ என்பதை அவர் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் தற்போது மற்ற படங்களில் நடித்து வருவதாகவும் அவற்றை முடித்த பிறகு, தான் அவரை வைத்து இயக்கும் படத்துக்கான பணிகள் தொடங்கும் என்றும் வெங்கட் பிரபு கூறினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமா