‘ராஜமாதா’வை ஒதுக்கிய ஶ்ரீதேவி: உண்மையை உடைத்த கணவர் போனி கபூர்

2 mins read
e9951f91-4b35-440c-9a5b-ea84a37ade01
ஸ்ரீதேவி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களை, ஒரே பாகமாக இணைத்து, புதுப் பதிப்பு உருவாகியிருப்பது தெரிந்த செய்திதான்.

இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் புதுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘பாகுபலி’யில் ‘ராஜ மாதா’ சிவகாமி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அசத்தியிருந்தார். உண்மையில், சிவகாமியாக முதலில் ஸ்ரீதேவியைத்தான் நடிக்க வைக்க விரும்பினாராம் இயக்குநர் ராஜமவுலி.

ஸ்ரீதேவியும் இப்படியொரு வேடத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டியபோதிலும், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதாகக் கூறியுள்ளார் போனி கபூர்.

“சம்பளம், பிற தேவைகள் குறித்து ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக அமையவில்லை.

அதனால் ராஜமவுலிக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. அதனால்தான் ‘பாகுபலி’யில் ஸ்ரீதேவியால் நடிக்க முடியவில்லை.

“தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவி அதிக சம்பளம் கேட்பதாக ராஜமவுலியிடம் கூறிவிட்டனர். உண்மையாக என்ன நடந்தது என்பதைச் சொல்லவில்லை. எனவே, அவர்கள்தான் குற்றவாளிகள்,” என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி ஸ்ரீதேவி வீட்டுக்கே சென்று கதையைக் கூறியுள்ளார்.

மேலும், ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் குறித்தும் விரிவாக விவரித்தாராம்.

மேலும், ஸ்ரீதேவிக்கு இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்ததால் அவரது நடிப்பு ‘பாகுபலி’க்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும் என்றும் போனி கபூர் கூறியுள்ளார்.

“சாதகமான சூழல் இருந்தும் ‘பாகுபலி’ தயாரிப்பாளர்கள், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திற்காக ஸ்ரீதேவி வாங்கிய தொகையைவிட குறைவான சம்பளம்தான் தரமுடியும் என்றனர். அதனால்தான் அவரும் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை,” என்று ‘கேம் ஜேஞ்சர்’ எனும் யூடியூப் ஒளிவழிக்கு அளித்த நேர்காணலில் மேலும் கூறியுள்ளார் போனி கபூர்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், அர்கா மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்த ‘பாகுபலி’யின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன.

குறிப்புச் சொற்கள்