கடந்த ஈராயிரமாவது ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமான ஸ்ரீ திவ்யா, தனது திரைப்பயணத்தில் 23 ஆண்டுகளைக் கடந்துவிட்டார்.
எனினும் இன்னும் நடிப்பு மீதான ஆசை குறையவில்லை என்று சொல்பவர், தற்போது ‘மெய்யழகன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தாம் எதிர்பார்த்தபடியே நல்ல கதாபாத்திரம் அமைந்திருப்பதாகச் சொல்லும் ஸ்ரீதிவ்யா, 23 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நீடித்திருப்பதை பெருமையாகக் கருதும் அதே வேளையில், சற்று பயமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
“காரணம், எனக்கான பொறுப்புகள் அதிகரித்துவிட்டதாகக் கருதுகிறேன். இனி நல்ல, தரமான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
“இதுவரை நான் அவசரப்பட்டு எந்தப் படத்திலும் நடித்ததில்லை. நன்கு யோசித்து எனக்கான கதாபாத்திரம் சரிப்பட்டு வந்தால் மட்டுமே நடித்திருக்கிறேன். எனவே மோசமான ஒரு படத்தில் நடித்ததாக நான் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை,” என்கிறார் ஸ்ரீதிவ்யா.
‘மெய்யழகன்’ படத்தில் விஜய் சேதுபதிதான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். அவர் நடிக்கவில்லை என்பது உறுதியான பின்னர் கார்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
“ஆனால் மற்ற அனைவருக்கும் முன்பாக என்னை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
“இது மிக வித்தியாசமான கதை. மாமன், மச்சான் உறவு குறித்தும் அதில் உள்ள ஆழமான பிணைப்பு குறித்தும் இதுவரை யாரும் அதிகம் சொன்னதில்லை. ‘மெய்யழகன்’ படம் இதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“முன்பு ‘96’ படம் எப்படி காதல் குறித்து அழகாக, ஆழமாக பேசியதோ, அதேபோல் ‘மெய்யழகன்’ படம் முழுக்க முழுக்க மனிதம், மனிதாபிமானத்தின் உண்மைகளை முன்வைக்கும். இதை மிகத்தரமான படைப்பு என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை,” என்கிறார் ஸ்ரீ திவ்யா.
இயக்குநர் பிரேம்குமாருடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இவர் விரும்பினாராம். அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டதாகச் சொல்கிறார்.
தாம் இயக்குநர் பிரேம்குமாரின் தீவிர ரசிகை என்றும் ஒவ்வொரு காட்சியையும் நன்றாக விளக்கி, கலைஞர்களைப் பொறுமையாக வேலை வாங்கக்கூடிய இயக்குநர் என்றும் அவரைப் பாராட்டுகிறார்.
“கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய இருவருடனும் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். இயக்குநர் ‘ஆக்ஷன்’ என்று சொல்வதற்கு முன்பும் அதற்கு பின்பும் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருவரும் மாறிப்போவார்கள்.
“இருவருமே மிகுந்த திறமைசாலிகள். கார்த்தி எப்போதுமே ஜாலியாக காணப்படுவார். ஆனால் தன் காட்சிகளைப் படமாக்கும்போது நடிப்பில் மட்டுமே அவரது முழுக் கவனமும் இருக்கும்.
“அரவிந்த்சாமி மிக அமைதியானவர். படப்பிடிப்பின்போது அதிகம் பேசாமல் ஓர் ஓரமாக அமர்ந்து சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிப்பார்.
“இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதுபோல் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. மற்ற அனைவரும் தூங்கிவிட்டாலும்கூட கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய இருவரும் தங்களுக்கான அடுத்தடுத்த காட்சிகள், வசனங்களைப் படித்துப் பார்த்து பயிற்சி செய்வார்கள்,” என்று சொல்லும் ஸ்ரீதிவ்யா, இப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைப்படி, மிகவும் வெள்ளந்தியான மனிதரான கார்த்தியின் மனைவிதான் நந்தினியாம்.
“படம் முழுவதும் என்னை ‘டீச்சர்’ என்றுதான் கார்த்தி அழைப்பார். அமைதியான, அதேசமயம் புத்திக்கூர்மையுள்ள பெண்ணாக எனது கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
“சுருக்கமாகச் சொன்னால், வெள்ளந்தியான கணவரின் புத்திசாலி மனைவி என்று குறிப்பிடலாம்,” என்கிறார் ஸ்ரீ திவ்யா.


