‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் தயாராகி உள்ளது.
அறிமுக இயக்குநர் முகுந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஆனந்த்ராஜ், கடுமையாக உழைத்ததால்தான் தம்மால் திரைத்துறையில் தாக்குப்பிடிக்க முடிவதாகக் குறிப்பிட்டார்.
“நான் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவேன். என்னால் பயமுறுத்தவும் முடியும், சிரிக்க வைக்கவும் முடியும். ஆனால், இந்தத் திறமையை என்னிடம் வளர்த்தவர்கள் இயக்குநர்கள்தான்.
“நான் ஒரு நடிகராக இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு என் அப்பா முக்கியக் காரணம். அவர் இறந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். அடுத்த இரண்டு நாள்களுக்கு படப்பிடிப்பு இல்லை என இயக்குநர் சொன்னார்.
“அப்போது, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘அப்பா தவறிவிட்டார், உடனே புறப்பட்டு வா’ என்ற தகவல் கேட்டு அதிர்ந்தேன். இறுதியாக மகனைப் பார்க்கத்தான் படப்பிடிப்பை நிறுத்தினீர்களா அப்பா என்று மனத்துக்குள் யோசித்தபடி அவரது உடலைப் பார்த்துக் கதறினேன்.
“என் முதுகில் குத்தியவர்களால் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. என்னைப் பலமுறை குத்திக்குத்திக் கொலை செய்துவிட்டார்கள். வீட்டுக்கு வந்து ஒரு படத்துக்குப் பேசுவார்கள். ஆனால், அந்தப் படத்தில் நான் இருக்கவே மாட்டேன்.
“ஒரு கலையைக் கலையாக மட்டும் பாருங்கள். என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம்மையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு திரையுலகைக் கட்டமைக்கிறார்கள். அதையும் கடந்துதான் ஓடிக்கொண்டே இருக்கிறோம்,” என்றார் ஆனந்த்ராஜ்.

