நட்சத்திர ஜோடியின் சுவாரசியமான மலரும் நினைவுகள்

நட்சத்திர ஜோடியின் சுவாரசியமான மலரும் நினைவுகள்

2 mins read
aae71f7b-6dba-420b-b3a2-be0d1350d0a5
மனைவி சுசித்ராவுடன் மோகன்லால். - படம்: விகடன் சினிமா
Google News Preferred Icon

புகழ்பெற்ற மலையாள நடிகர் மோகன்லால் தனது வயதுக்கு ஏற்ற தரமான கதைக்களங்கள், கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார்.

மோகன்லால் பேட்டி என்றால் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால், பேசத் தொடங்கிவிட்டால் மனம்விட்டு அனைத்தையும் பகிர்ந்துகொள்வார் என்று ஊடகவியலாளர்களும் அவரது நண்பர்களும் கூறுவது வழக்கம்.

இந்நிலையில், மோகன்லாலின் மனைவி சுசித்ரா, அண்மைய பேட்டி ஒன்றில், நடிகர் தனது கணவருடனான முதல் சந்திப்பு, தங்களுடைய திருமணம் குறித்துப் பல்வேறு சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, தனது தந்தை எச்சரிக்கை விடுத்ததாக சுசித்ரா தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு குடும்ப நிகழ்ச்சியில்தான் மோகன்லாலை முதன்முதலாகச் சந்தித்துள்ளார் சுசித்ரா. இரு குடும்பத்தாரும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள். ஒரு ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், அந்தப் புகைப்படம் கடைசிவரை தனக்குக் கிடைக்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

பின்னர், மோகன்லாலைத் திருமணம் செய்ய விரும்புவதாகத் கூறியபோது சுசித்ரா வீட்டில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது தந்தை முக்கியமான பிரச்சினையை எழுப்பினாராம்.

“மோகன்லால் சினிமா துறையில் இருப்பவர். படப்பிடிப்பு காரணமாகப் பல நாள்கள் வீட்டை விட்டு வெளியிலேயே இருக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும்.

“ஒரு நடிகரைத் திருமணம் செய்துகொண்டு, அதன்காரணமாக பின்னாள்களில் வரக்கூடிய பிரச்சினைகளைச் சொல்லி என்னிடம் வந்து அழுதால், நான் உன்னை வீட்டிற்குள் சேர்க்க மாட்டேன்,” என்று கண்டிப்பாகக் கூறியுள்ளார் சுசித்ராவின் தந்தை.

திருமணத்திற்குப் பிறகு அவரது பயம் அர்த்தமற்றதாகிவிட்டது.

ஒருமுறை, சுசித்ராவின் தந்தை மோகன்லாலிடம், “என் மகளை நன்றாகப் பார்த்துக்கொண்டு அவளைச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டீர்கள்,” என்று விளையாட்டாகக் கூறினாராம்.

அதற்கு மோகன்லால், “உங்கள் மகளை எவ்வளவு அன்பாகப் பார்த்துக்கொண்டீர்களோ, அதைவிட அன்பாக என்னால் பார்த்துக்கொள்ள முடியாது,” என்று மிக பணிவாகப் பதிலளித்தாராம்.

திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம்வரும் மோகன்லால்-சுசித்ரா ஜோடியின் இந்த ஆரம்பகால சுவாரசியமான மலரும் நினைவுகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்புச் சொற்கள்