அன்று தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்காகவே தமிழ் கற்றவர், இன்று தமிழ்நாடு அரசு வழங்கிய விருதிற்குச் சொந்தக்காரர்.
வெள்ளித்திரை தொடங்கி சின்னதிரை வரை ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகையாக வலம்வரும் ‘சங்கராபரணம்’ ராஜலட்சுமி தமது கலைப் பயணத்தின் நீங்கா நினைவுகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள திருவாட்டி ராஜலட்சுமி, 61, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் மின்னி வருகிறார்.
பிறந்தது ஆந்திராவில் என்றாலும் இவரது கலைப்பயணத்தின் முக்கிய மைல்கல் தமிழ்த் திரையுலகம்தான்.
“15 வயதிலேயே ‘சங்கராபரணம்’ எனும் தெலுங்குப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானேன். அப்படம் தேசிய அளவில் விருதுகளை வெல்ல, அப்படத்தின் வெற்றியால் மக்கள் மனத்தில் முக்கிய இடம் கிடைத்தது,” என்றார் திருவாட்டி ராஜலட்சுமி.
ரஜினிக்கு நாயகி
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் திரைத்துறை முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ் பெற்றிருந்தாலும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் நடித்த ‘மூன்று முகம்’ திரைப்படம் தந்த நினைவுகளை மறக்கவே முடியாது என்கிறார் திருவாட்டி ராஜலட்சுமி.
“அப்படத்தில், ‘அலெக்ஸ் பாண்டியன்’ எனும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக ரஜினியும் அவரின் மனைவியாக நானும் நடித்துள்ளோம். ‘அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பம் போல இருக்க’ என்பதுதான் நடிகர் ரஜினி என்னைப் பார்த்துக் கூறிய முதல் வசனம். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் இன்றளவும் மறக்க முடியாது,” என்று இவர் சொன்னார்.
படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த ‘நான் செய்த குறும்பு’ பாடலை இப்போதும் ரசிகர்கள் தம்மிடம் சொல்லிப் பூரிப்பது உண்டு என்கிறார் இவர்.
தொடர்புடைய செய்திகள்
“அப்போது, அப்படத்தின் நூறாவது நாள் விழாவில் பங்கேற்க சென்னை, மதுரை எனப் பல இடங்களுக்குச் சென்றபோது, மக்கள் ‘அண்ணி’ என்று அழைத்த ஆரவாரத்தின் சத்தம் இன்றளவும் மலரும் நினைவுகள்,” என்று திருவாட்டி ராஜலட்சுமி நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
வாழ்க்கைத் தொழிலுக்காகத் தமிழ் கற்றவர், தலைமுறை கடந்தும் மக்களைத் தம் நடிப்பால் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.
கதாநாயகி முதல் கதையின் நாயகி வரை
கதாநாயகியாக திரையுலகில் நுழைந்து, பிறகு கதையின் நாயகியாக பல படங்களில் முத்திரை பதித்த திருவாட்டி ராஜலட்சுமி, “ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் திரையுலகில் தொடர்ந்து நிலைத்திருப்பது மனத்திற்கு நிறைவை அளிக்கிறது.
“குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் நிரந்தரமாகத் தங்கிவிட்டேன். கலையுலகில் கிடைத்த இரண்டாவது சுற்றில் விஜய், அஜித், தனுஷ் என இக்கால நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கவும் படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
“அதேபோல, வெள்ளித்திரையில் இருந்து சின்னதிரைக்கு வந்த பாதையும் சிறப்பானதாகவே அமைந்துவிட்டது. குறிப்பாக, தமிழ் நாடகத் தொடரில் நடிப்பதால் ஒவ்வொரு நாளும் மக்கள் இல்லங்களுக்குள் நுழைந்து அவர்களைச் சந்திக்கிறேன்,” என்றார்.
கலையுலகம் அளித்த ஒப்பற்ற பரிசு
ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்கள் இன்றும் தம்மை அடையாளம் கண்டு பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறும் இவர், அண்மையில் ‘பிள்ளை நிலா’ தொடரில் நடித்ததற்காகத் தமிழ்நாடு அரசு வழங்கிய ‘சிறந்த வில்லி நடிகை’ விருது சற்றும் எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார்.
“அழகான கண்கள், அமைதியான முகம், பாசமிகு முகம் என்றே நடித்திருக்கிறேன். ஆனால், வில்லியாக மிரட்ட வாய்ப்பு வந்தபோது முதலில் தயங்கினேன்.
“ஆயினும், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியது மாறுபட்ட அனுபவம். எதிர்மறைக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது பலர் திட்டுவார்கள். எனினும், அந்த முயற்சி கவனிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைப்பது மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது,” என்றார் திருவாட்டி ராஜலட்சுமி.
புத்தாண்டை விருதுடன் தொடங்கியதைப் பெருமையாக உணரும் இவர், “இந்த வாழ்க்கை, புகழ், மக்கள் ஆதரவு இவையெல்லாம் கலையுலகம் தந்த ஒப்பற்ற பரிசு. நடிப்பு என்பது இறைவன் எனக்குக் கொடுத்த வரம். எனவே, இயன்றவரை, இறுதிவரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்,” என்று கூறி விடைபெற்றார்.

