இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அமீர்கான், நடிகர், நடிகைகளின் ‘நட்சத்திரம்’ என்ற நிலை நிரந்தரமானது அல்ல என்று கூறியுள்ளார்.
இது குறித்து அமீர்கான் அளித்துள்ள நேர்காணலில், “இயற்கைச் சக்கரம் நிரந்தரமாக சுற்றிக்கொண்டே இருக்கும். புதிய நடிகர்கள் உருவாவர். பழையவரை மறைந்து விடுவர்.
“நட்சத்திர ஒளி என்பது நிரந்தரமற்றது. சில வகை ஒளி அதிக காலம் நீடித்திருக்கும். சில வகை ஒளி மிகக் குறைந்த காலத்துக்கே நீடிக்கும். ஆனால் மறைவது மட்டும் உறுதி.
“ஒவ்வொரு தலைமுறையிலும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் நடிகர்கள் வந்துகொண்டே இருப்பர். எங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால் நாங்கள் இரண்டு தலைமுறை ரசிகர்களைப் பார்த்தோம். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வெளியே போகவேண்டிய நிலை வரும். இது தவிர்க்க முடியாதது. புதிய நீர் வரும்போது பழைய நீரை அடித்துச்சென்று விடும். இது இயற்கையின் நியதி,’‘ என்றார்.
பல பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கும் அமீர்கான், தமிழில் சூர்யா நடித்து ஹிட்டான ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

