இளமையாக இருக்க நம்மை நாமே நேசிக்க வேண்டும்: ஸ்ரேயா

2 mins read
bad7b6e1-1ce9-4b59-8d25-ff1137a3c4c6
ஸ்‌ரேயா. - படம்: ஊடகம்

இளமையாக இருப்பதில் நதியாவுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளார் ஸ்ரேயா.

திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நாயகிகள் பலர் அண்மைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களை அழகாக, இளமையாக வெளிப்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தனக்கு எந்தவிதமான தொழில்நுட்பங்களின் தயவும் தேவைப்படவில்லை என்கிறார் நடிகை ஸ்ரேயா.

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழ் ஊடகம் ஒன்றுக்கு விரிவாக பேட்டி அளித்துள்ளார்.

“சிறு வயது முதலே சினிமாவில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தேன். நாளுக்கு நாள் என்னை நல்லவிதமாக மெருகேற்றிக்கொள்ள, ஊக்கப்படுத்திக்கொள்ள திரையுலகம்தான் தூண்டுகோலாக அமைந்தது. அதே சமயம் என்னைச்சுற்றி உள்ள நல்ல மனிதர்களையும் நண்பர்களையும் மறக்க இயலாது,” என்கிறார் ஸ்‌ரேயா.

நடிகை ஸ்‌ரேயா.
நடிகை ஸ்‌ரேயா. - படம்: ஊடகம்

திருமணத்துக்கு முன்பு, ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்காக மாலத்தீவுக்குச் சென்றிருந்தாராம். ஆனால் ஏப்ரல் மாதம் தொடங்கும் பயிற்சிக்கு இவர் மார்ச் மாதமே சென்றுவிட்டாராம். அதனால் விமானப் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கி எல்லாமே பெரும் குழப்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்.

“என்னுடைய தோழி, ‘தப்பு செய்துவிட்டீர்கள். அடுத்த மாதம்தான் பயிற்சி’ என்ற விவரம் சொன்னதும், ‘இதே விமானத்தில் நாடு திரும்பிவிடலாமா’ என்று கேட்டேன். பிறகு அவரது ஏற்பாட்டிலேயே தெற்கு மாலத்தீவுக்குச் சென்றேன்.

“ஒரு பெரிய பயணிகள் கப்பலில் நான் மேற்கொண்ட அந்தப்பயணம் மறக்க இயலாத ஒன்று. அப்போதுதான் எனது வருங்கால கணவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். இருவருக்கும் இந்தப் பயணத்தில்தான் காதல் மலர்ந்தது,” என்கிறார் ஸ்ரேயா.

கணவர் ஆண்டரிக்கும் இவருக்கும் கலாசார ரீதியாக நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், நிறைய கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் பேசித் தீர்த்துக்கொள்வதாக சொல்கிறார் ஸ்ரேயா.

பிரபல திரைப்பட நடிகையாக வலம்வந்த தன்னை, கணவர் ஆண்டரி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தூய்மையான அன்புக்காக திருமணம் செய்துகொண்டதாகச் சொல்கிறார் ஸ்ரேயா.

“என்னை மாற்றியதில் ஆண்டிரியைப் போலவே என் மகள் ராதாவுக்கும் பெரிய பங்குண்டு. தாயான பிறகுதான் நான் என்னை நேசிக்கக் கற்றுக்கொண்டேன்.

“இவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் வந்ததை மிகப்பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன்,” என்று சொல்லும் ஸ்ரேயாவுக்கு, பிரசவமான பின்பு உடல் எடை கூடிவிட்டதாம்.

யோகா, கடும் உடற்பயற்சி, நடனப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் தன் உடல் எடையைக் குறைத்ததாகவும் அதன் பிறகே குழந்தை பிறந்தது குறித்து வெளியே தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

“பிரசவத்துக்குப் பிறகு உடல் எடை கூடுவது இயல்புதான். ஆனால் உடல் ரீதியான மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது.

“எனினும் நம் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும், பழையபடி இளமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

“இவை சாத்தியமாக வேண்டும் எனில் நம்மை நாமே நேசிக்க வேண்டும்,” என்கிறார் ஸ்ரேயா.

குறிப்புச் சொற்கள்